நியூசிலாந்து அபார பந்து வீச்சு: 76 ரன்னில் சுருண்ட இலங்கை - ஹென்றி ஷிப்லி 5 விக்கெட் எடுத்து அசத்தல்...!

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது.

Update: 2023-03-25 08:17 GMT

Image Courtesy: @ICC

ஆக்லாந்து,

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது ஆட்டம் ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது.

இந்தப்போட்டிக்கான டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சாட் பவுஸ் மற்றும் பின் ஆலென் ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாட் பவுஸ் 14 ரன்னில் வீழ்நதார். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின் ஆலென் அரைசதம் அடித்து அசத்தினார்.

இதையடுத்து களம் இறங்கிய வில் யங் 26 ரன், டேரில் மிட்செல் 47 ரன், டாம் லதாம் 5 ரன், கிளென் பிலிப்ஸ் 39 ரன், ரச்சின் ரவிந்திரா 49 ரன் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து தடுமாறியது. இறுதியில் அந்த அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 274 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

இலங்கை அணி தரப்பில் சமிகா கருணாரத்னே 4 விக்கெட்டும், கசுன் ரஜிதா, லஹிரு குமாரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. களம் இறங்கிய முதலே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இலங்கை அணியால் அதிலிருந்து மீளவே முடியவில்லை.

அபாரமாக பந்துவீசிய நியூசிலாந்து அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர். அந்த அணியில் அஞ்சிலோ மேத்யூஸ் (18 ரன்), சமிகா கருணாரத்னே (11 ரன்), லஹிரு குமாரா (10 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் நடையை கட்டினர்.இறுதியில் அந்த அணி 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 76 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் நியூசிலாந்து 198 ரன்னில் அபார வெற்றி பெற்றது.

நியூசிலாந்து தரப்பில் ஹென்றி ஷிப்லி 5 விக்கெட்டுகளை எடுத்தார். டேரில் மிட்செல், பிளெய்ர் டிக்னர் தலா 2 விக்கெட்டும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என நியூசிலாந்து முன்னிலையில் உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்