நாக்பூர் டெஸ்ட்: 'ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை குழப்பினேன்' - ஜடேஜா

நாக்பூரில் தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆஸ்திரேலியா 177 ரன்களில் ஆல்-அவுட் ஆனது.

Update: 2023-02-09 23:49 GMT

நாக்பூர்,

இந்தியாவுக்கு வருகை தந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி பார்டர்-கவாஸ்கர் கோப்பைக்கான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் கே.எஸ்.பரத் அறிமுக வீரர்களாக இடம் பிடித்தனர். சூர்யகுமாருக்கு வாய்ப்பு கிடைத்ததால் சுப்மன் கில் வெளியே உட்கார வைக்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் டிராவிஸ் ஹெட் கழற்றி விடப்பட்டு, புதுமுக சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பி சேர்க்கப்பட்டார்.

'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் தயக்கமின்றி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதையடுத்து டேவிட் வார்னரும், உஸ்மான் கவாஜாவும் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். ஆரம்பமே அந்த அணிக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜின் பந்து வீச்சில் கவாஜா (1 ரன்) எல்.பி.டபிள்யூ. ஆனார். முதலில் நடுவர் விரலை உயர்த்த மறுத்தார். பிறகு டி.ஆர்.எஸ்-ன்படி அப்பீல் செய்ததில் கவாஜா சிக்கினார். முகமது ஷமியின் அடுத்த ஓவரில் வார்னருக்கு (1 ரன்) ஆப்-ஸ்டம்பு பல அடி தூரம் பல்டியடித்தது.

3-வது ஓவருக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடிய நிலையில் 3-வது விக்கெட்டுக்கு துணை கேப்டன் ஸ்டீவன் சுமித்தும், 'நம்பர் ஒன்' பேட்ஸ்மேன் மார்னஸ் லபுஸ்சேனும் கைகோர்த்து விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தினர். சுமித் 6 ரன்னில் இருந்த போது கொடுத்த கொஞ்சம் கடினமான கேட்ச் வாய்ப்பை ஸ்லிப்பில் நின்ற கோலி தவறவிட்டார்.

இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா ஆஸ்திரேலியாவின் பேட்டிங்கை சீர்குலைத்தார். ஸ்கோர் 84-ஆக உயர்ந்த போது லபுஸ்சேன் (49 ரன், 123 பந்து, 8 பவுண்டரி) ஜடேஜாவின் பந்து வீச்சில் ஏமாந்து ஸ்டம்பிங் செய்யப்பட்டார். அடுத்து வந்த மேட் ரென்ஷா (0) முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற்றப்பட்டார்.

மூத்த சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் மீதே அதிக எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அவரை காட்டிலும் ஜடேஜாவின் பந்து வீச்சு மிரட்டலாக இருந்தது. சொல்லப்போனால் அஸ்வினின் முதற்கட்ட பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர்கள் சுலபமாக ரன் எடுத்தனர்.

பொறுமையாக செயல்பட்ட ஸ்டீவன் சுமித், அக்ஷர் பட்டேலின் ஒரே ஓவரில் 3 பவுண்டரி ஓடவிட்டார். ஆனால் அந்த உற்சாகம் நிலைக்கவில்லை. ஜடேஜா வீசிய அதற்கு அடுத்த ஓவரில் சுமித் (37 ரன், 107 பந்து 7 பவுண்டரி) கிளீன் போல்டு ஆனார். பந்து எப்படி பிட்ச்சாகி ஸ்டம்புக்குள் ஊடுருவியது என்ற குழப்பத்தோடு நடையை கட்டினார். ஜடேஜாவின் பந்து வீச்சில் சுமித் விக்கெட்டை பறிகொடுப்பது இது 5-வது முறையாகும். அப்போது ஆஸ்திரேலியா 5 விக்கெட்டுக்கு 109 ரன்களுடன் தத்தளித்தது.

6-வது விக்கெட்டுக்கு பீட்டர் ஹேன்ட்ஸ்கோம்ப்பும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியும் இணைந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் தாக்குப்பிடித்தனர். 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட்டுகளில் கவனம் செலுத்திய அலெக்ஸ் கேரி சில பவுண்டரிகளையும் விரட்டினார். ஆனால் கடைசியில் அதே போல் அஸ்வின் பந்து வீச்சில் 'ரிவர்ஸ் ஸ்வீப்' ஷாட் அடிக்க முற்பட்ட போது லெக்-சைடு வாக்கில் விழுந்த பந்து பேட்டில் உரசியபடி ஸ்டம்பை பதம் பார்த்தது. அலெக்ஸ் கேரி 36 ரன்கள் (33 பந்து, 7 பவுண்டரி) எடுத்தார். அலெக்ஸ் கேரி- ஹேன்ட்ஸ்கோம்ப் ஜோடி 6-வது விக்கெட்டுக்கு 53 ரன்கள் திரட்டியது.

இந்த கூட்டணி உடைந்ததும் எஞ்சிய வீரர்கள் விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். ஹேன்ட்ஸ்கோம்ப் 31 ரன்னில் (84 பந்து, 4 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். தேனீர் இடைவெளிக்கு பின்னர் ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 63.5 ஓவர்களில் 177 ரன்களுக்கு சுருண்டது. அந்த அணி கடைசி 15 ரன்னுக்கு 5 விக்கெட்டுகளை தாரைவார்த்தது குறிப்பிடத்தக்கது.

நமது பவுலர்கள் பெரும்பாலும் ஸ்டம்பை குறி வைத்தே தாக்குதல் தொடுத்தனர். சில பந்துகள் திரும்பாமல் அப்படியே ஸ்டம்பை நோக்கி சென்ற போது அதை ஆஸ்திரேலிய வீரர்கள் கணிக்க முடியாமல் திணறிப்போனார்கள். சுமித் கூட இந்த வகையில் தான் வீழ்த்தப்பட்டார்.

இந்திய தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை அள்ளினார். கால்முட்டி காயத்துக்கு ஆபரேஷன் செய்து கொண்டு 5 மாத ஓய்வுக்கு பிறகு மறுபிரவேசம் செய்த முதல் போட்டியிலேயே ஜடேஜா கவனத்தை ஈர்த்துள்ளார். அவர் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்துவது இது 11-வது முறையாகும். அஸ்வின் தனது பங்குக்கு 3 விக்கெட் எடுத்தார்.

அடுத்து இந்தியா தனது முதல் இன்னிங்சை விளையாடியது. கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் சிறப்பான தொடக்கம் தந்தனர். கம்மின்ஸ் வீசிய முதல் ஓவரிலேயே 3 பவுண்டரிகளை தெறிக்கவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்திய ரோகித் சர்மா, லயனின் பந்து வீச்சில் ஒரு சிக்சரும் பறக்க விட்டார். ஆட்ட நேரம் முடிய ஒரு ஓவர் மட்டுமே எஞ்சியிருந்த போது, ராகுல் (20 ரன், 71 பந்து, ஒரு பவுண்டரி) அறிமுக சுழற்பந்து வீச்சாளர் டாட் மர்பியின் பந்து வீச்சில் அவரிடமே பிடிபட்டார்.

முதல் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 24 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. தனது 15-வது அரைசதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா 56 ரன்களுடனும் (69 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் தடுப்பாளராக இறக்கி விடப்பட்ட அஸ்வின் ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர்.

தொடக்க நாளில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. 2-வது நாள் ஆட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் 5 விக்கெட்டுகளை அறுவடை செய்து முத்திரை பதித்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் 34 வயதான ஜடேஜா முதல் நாள் ஆட்டம் முடிந்த பிறகு நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாக்பூர் ஆடுகளம் (பிட்ச்) முழுக்க முழுக்க சுழற்பந்து வீச்சுக்கு ஏற்றார் போல் சுழன்று திரும்பும் ஆடுகளமாக இருக்கவில்லை. இந்தியாவில் உள்ள மற்ற ஆடுகளங்களுடன் ஒப்பிடும் போது இது மெதுவாகவும், அதிக பவுன்ஸ் இன்றியும் காணப்பட்டது. இதனால் இன்றைய நாள் (நேற்று) பேட்ஸ்மேன்கள் பந்தை தடுத்து ஆடுவதில் சிரமமாக இல்லை. ஆனால் போக போக தற்காப்பு பாணியில் ஆடுவது கடினமாக இருக்கும்.

நான் ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பேட்ஸ்மேன்களை குழப்பினேன். ஒவ்வொரு பந்தையும் சுழன்று திரும்பும் வகையில் வீசவில்லை. ஏற்கனவே சொன்னது மாதிரி ஆடுகளம் வேகமின்றி இருந்ததால் அதை பயன்படுத்தி பேட்ஸ்மேன் மனதில் சந்தேகம் உருவாகும் வகையில் வெவ்வேறு கோணங்களில் பந்து வீசினேன். அதற்கு பலன் கிடைத்தது. உதாரணமாக லபுஸ்சேன் கிரீசை விட்டு இறங்கி வந்து விளையாடிய போது களத்தில் பந்து பிட்ச் ஆனதும் சுழன்று திரும்பியதால் ஏமாந்து ஸ்டம்பிங் ஆனார். அதே நேரத்தில் சுமித்துக்கும் பந்தை அதே இடத்தில் தான் பிட்ச் செய்தேன். ஆனால் பந்து சுழலாமல் அப்படியே நேராக சென்று ஸ்டம்பை தாக்கியது.

இவ்வாறு ஜடேஜா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்