'என் தோள் மீது கை போட்டு தோனி கூறிய அறிவுரை இதுதான்'.. - இந்திய அணிக்கு தேர்வான முகேஷ் குமார் நெகிழ்ச்சி...!

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.

Update: 2023-07-03 12:33 GMT

Image Courtesy: Instagram - mukeshkumar3924

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு பின்னர் கிட்டதட்ட ஒருமாத கால ஓய்வுக்கு பின்னர் வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடரில் வரும் 12ம் தேதி முதல் தொடங்க உள்ளது.

இந்த தொடருக்கான ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் டெஸ்ட் அணியில் புஜாரா, உமேஷ் யாதவ் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக கெய்க்வாட், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் போன்ற இளம் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு ஹர்த்திக் பாண்ட்யா துணை கேப்டனாகவும், டெஸ்ட் அணிக்கு ரஹானே துணை கேப்டனகாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் இடம் பிடித்துள்ள இளம் வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு புறப்படும் முன்னதாக அவர் அளித்த பேட்டி ஒன்றில் தோனி ஐபிஎல் தொடரின் போது என்னென்ன அறிவுறைகளை வழங்கினார் என்பது குறித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

நான் எப்பொழுதுமே தோனி பாயை பார்க்கும்போது கேட்க வேண்டும் என்று நினைத்த கேள்வியை தான் அவரிடம் கேட்டேன். அந்த வகையில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் போது அவரை சந்திப்பு பேச வாய்ப்பு கிடைத்தது.

அந்த வகையில் நான் தோனியிடம் நீங்கள் ஒரு கேப்டனாகவும், ஒரு விக்கெட் கீப்பராகவும் பந்துவீச்சாளர்களுக்கு என்னென்ன அறிவுறைகளை வழங்குவீர்கள்? என்று கேட்டேன்.

அதற்கு அவர் என் தோள் மீது கையை போட்டு நான் எப்பொழுதுமே பந்துவீச்சாளர்களுக்கு ஒரே ஒரு அட்வைஸ் தான் கொடுப்பேன். அதாவது நீங்கள் எவ்வாறு பந்து வீச வேண்டும் என்று நினைக்கிறீர்களோ அதனை மைதானத்தில் செயல்படுத்தி பார்க்க வேண்டும்.

ஏனெனில் நீங்கள் உங்களது திறனை மைதானத்தில் பரிசோதித்தால் தான் நீங்கள் அதிலிருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொள்ள முடியும். எனவே உங்களுடைய திறன் என்ன என்று புரிந்து கொண்டு அதற்கேற்ற அனைத்து திட்டங்களையும் களத்தில் செயல்படுத்தி பாருங்கள். முடிவுகளைப் பற்றி கவலைப்படாமல் உங்கள் பந்துவீச்சை நீங்கள் வெளிப்படுத்தினால் தான் முன்னேற்றத்தை காண முடியும்.

அது மட்டுமே நான் பவுலர்களிடம் சொல்லுவேன் என்று எனக்கு அறிவுரை வழங்கினார். அவர் கொடுத்த அறிவுரை எனக்கு ஐபிஎல் தொடரின் போது மிகச் சிறப்பாக உதவியது. அதோடு இந்திய அணிக்காகவும் அவர் கொடுத்த சில டிப்ஸ்களை பயன்படுத்தி நான் சிறப்பாக பந்துவீசுவேன் .

இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்