ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகல்
உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து கேப்டன் பதவியிலிருந்து நபி விலகியுள்ளார்.
அடிலெய்டு,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகியுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் ஆப்கானிஸ்தான் 4 ரன்கள் வித்தியாசத்தில் போராடி தோல்வி அடைந்தது.
இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி 5 போட்டிகளில் 3 தோல்வி அடைந்துள்ளது. அந்த அணியின் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் அந்த அணி புள்ளி பட்டியலில் 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நிறைவு செய்துள்ளது. இதன் மூலம் உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணியின் பயணம் இன்றுடன் முடிவுக்கு வந்துள்ளதை தொடர்ந்து நபி தனது ராஜினாமா முடிவை அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக முகமது நபி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
ஆப்கானிஸ்தான் அணியின் டி20 உலகக் கோப்பைப் பயணம் முடிவுக்கு வந்துள்ளது. இதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. போட்டிகளின் முடிவுகளால் ரசிகர்களை போலவே நாங்களும் விரக்தியடைந்துள்ளோம்.
ஒரு கேப்டன் விரும்பும் அளவிற்கு உலகக் கோப்பை போன்ற மிகப்பெரிய ஐசிசி தொடர்களுக்கு எங்கள் அணி தயார்படுத்தப்படவில்லை. மேலும் கடந்த சில சுற்றுப்பயணங்களில் அணி நிர்வாகம், தேர்வுக் குழு மற்றும் எனது முடிவுகளில் வேறுபாடு இருந்துள்ளது. இது அணியின் சமநிலையில் தாக்கங்களை ஏற்படுத்தியது.
எனவே, உடனடியாக கேப்டன் பதவியை ராஜினாமா செய்கிறேன். அணி நிர்வாகம் விரும்பினால் ஒரு வீரராக தொடர்ந்து விளையாட தயாராக இருக்கிறேன் என நபி தெரிவித்துள்ளார்.