மேத்யூஸ் எனக்கு குரு போன்றவர் - ஜிம்பாப்வே இளம் வீரர் பேட்டி
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ஜிம்பாப்வே வெற்றி பெற்றது.;
கொழும்பு,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-0 என இலங்கை அணி கைப்பற்றியது.
இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது. டி20 தொடரின் முதலாவது ஆட்டத்தில் ஜிம்பாப்வேயை 3 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை வெற்றி பெற்றது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இலங்கை அணி அசலங்கா மற்றும் மேத்யூஸ் ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 173 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது.
அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக கிரேக் எர்வின் மற்றும் டினாஷே கமுன்ஹுகம்வே களம் இறங்கினர். இதில் கமுன்ஹுகம்வே 17 ரன்னிலும் அடுத்து களம் இறங்கிய பென்னட் 25 ரன், ராசா 8 ரன், வில்லியம்ஸ் 1 ரன் எடுத்து அடுத்தடுத்து அவுட் ஆகினர். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய எர்வின் அரைசதம் அடித்து அசத்தினார்.
கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டதால் இதனால் ஆட்டத்தில் பரபரப்பு உருவானது. இந்த கடைசி ஓவரை அனுபவ வீரர் ஏஞ்சேலோ மேத்யூஸ் வீசினார். இதில் முதல் பால் நோபாலாக வீசப்பட்டது. இதனை பயன்படுத்தி சிக்சர் பறக்க விட்ட லூக் ஜாங்வே அடுத்த 2 பந்துகளில் பவுண்டரியும் சிக்சரும் அடித்து மொத்தம் 25 ரன்கள் விளாசி அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார்.
இந்நிலையில் தன்னுடைய சிறுவயதில் தனது பேஸ்புக் பக்கத்தின் புரொபைல் பிக்சராக வைக்கும் அளவுக்கு ஏஞ்சலோ மேத்யூஸ் தமக்கு குரு போன்றவர் என லூக் ஜாங்வே கூறியுள்ளார். அப்படிப்பட்ட மேத்யூசுக்கு எதிராக இப்போட்டியில் அடித்து நொறுக்கி வென்றது மகிழ்ச்சியை கொடுப்பதாக தெரிவிக்கும் அவர் இது குறித்து போட்டியின் முடிவில் பேசியது பின்வருமாறு;-
"நான் குழந்தையாக இருக்கும்போது மேத்யூஸ்தான் என்னுடைய வால்பேப்பராக இருந்தார். அவர் அப்போது மிகவும் சிறப்பாக விளையாடுவார். நான் அப்போது இளம் பையனாக இருந்தேன். ஒரு கட்டத்தில் பேஸ்புக் பக்கத்தில் அவர்தான் என்னுடைய புரொபைல் பிக்சராக இருந்தார். இன்று நிறைய நிகழ்வுகள் நடந்தன. அதனால் நிறைய உணர்ச்சிகளும் உள்ளுக்குள் ஓடுகின்றன. இதற்காக நான் கடவுளுக்கு நன்றியுடையவனாக இருக்கிறேன்" என்று பேசினார்.