இம்பேக்ட் வீரர் விதிமுறையை விரும்புகிறேன்...ஆனால்.. - கங்குலி கருத்து

காலத்திற்கு தகுந்தாற்போல் இம்பேக்ட் வீரர் விதிமுறை புதுமையை ஏற்படுத்துவதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

Update: 2024-06-02 05:54 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் நடத்தப்படும் உள்ளூர் தொடரான ஐ.பி.எல்.-ல் சுவாரஸ்யத்தை கூட்ட கடந்த 2023-ம் ஆண்டு இம்பேக்ட் வீரர் விதிமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி வழக்கமாக பங்குபெறும் 11 வீரர்களை தவிர்த்து கூடுதலாக 5 வீரர்களை டாசின் போதே கேப்டன் இம்பேக்ட் பிளேயர் லிஸ்டில் அறிவிக்கலாம். அப்படி அறிவிக்கப்படும் அந்த ஐந்து பேர்களில் ஒருவர் பேட்ஸ்மேனாகவோ அல்லது பவுலராகவோ களமிறங்க முடியும். அப்படி இம்பேக்ட் பிளேயராக களமிறங்கும் வீரர் பவுலராக இருந்தால் நான்கு ஓவர்களை வீசலாம். அதேபோன்று பேட்ஸ்மேனாக இருந்தால் முழுவதுமாக பேட்டிங் விளையாடலாம்.

முன்னதாக இந்த வருடம் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி இமாலய ரன்களை குவித்தனர். குறிப்பாக ஐதராபாத் அணி மட்டும் 287 ரன்கள் விளாசியது மட்டுமின்றி, 5 ஓவர்களில் 100 ரன்கள் குவித்து எதிரணிகளை தெறிக்க விட்டது. இந்த அதிரடிக்கு கடந்த வருடம் பிசிசிஐ அறிமுகப்படுத்திய இம்பேக்ட் வீரர் விதிமுறை முக்கிய காரணமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன. ஏனெனில் அதன் காரணமாக ஒவ்வொரு அணியும் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கின.

இந்த விதிமுறையயில் தனக்கு அதிருப்தி இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக அறிவித்திருந்தார். அதேபோல நிறைய முன்னாள் இந்நாள் வீரர்களும் இம்பேக்ட் வீரர் விதிமுறை நீக்கப்பட வேண்டும் என்று கோரிக்கைகளை முன் வைத்தனர்.

இந்நிலையில் காலத்திற்கு தகுந்தாற்போல் இம்பேக்ட் வீரர் விதிமுறை புதுமையை ஏற்படுத்துவதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். இருப்பினும் டாஸ் வீசும் போதே இம்பேக்ட் வீரர்கள் யார் என்பதை அறிவிப்பது வெளிப்படைத் தன்மையை ஏற்படுத்தும் என்று கங்குலி கூறியுள்ளார். அத்துடன் மைதானத்தில் பவுண்டரி அளவை அதிகரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இம்பேக்ட் வீரர் விதிமுறையை நான் விரும்புகிறேன். ஆனால் டாஸ் வீசுவதற்கு முன்பாக இம்பேக்ட் வீரர் யார் என்பதை அறிவிக்க வேண்டும். அதிலும் ஒரு திறமை இருக்கிறது. எனவே இம்பேக்ட் வீரர் யார் என்பதை முன்னதாகவே வெளியிட வேண்டும். ஏனெனில் போட்டியில் வெற்றி பெறுவதற்கு உங்களுக்கு நிறைய திறமையும் திட்டமும் தேவைப்படும். ஐபிஎல் தொடரில் செய்ய வேண்டிய ஒரே மாற்றம் என்னவெனில் மைதானங்கள் இன்னும் கொஞ்சம் பெரிதாக்க வேண்டும். பவுண்டரி எல்லைகள் கொஞ்சம் விரிவாக்கப்பட வேண்டும். ஐபிஎல் சிறப்பான தொடர். ஆனால் நான் அந்த விதிமுறைக்கு ஆதரவாகவே இருக்கிறேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்