கிரிக்கெட் என்பது ஒரு அணியாக சேர்ந்து விளையாடுவது என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் - பொல்லார்ட்

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.

Update: 2024-04-15 12:44 GMT

Image Courtesy: Twitter

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது. வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக கெய்க்வாட் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும், கடைசி ஓவரில் களமிறங்கிய எம்.எஸ். தோனி 4 பந்துகளில் ஹாட்ரிக் சிக்சர் உட்பட 20 ரன்களும் குவித்து அசத்தினர்.

இதனையடுத்து இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா சதமடித்து அசத்தினார். ஆனால் மற்ற வீரர்கள் சொதப்பியதால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்த பின் மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் பொல்லார்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது, ஹர்திக் பாண்ட்யாவை விமர்சிப்பது தவறு. ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஆடுகளத்தில் ஒரு நல்ல நாளும் அமையும், கெட்ட நாளும் அமையும்.

இது போன்ற தோல்விக்கு பிறகு இவர்தான் காரணம். அவர்தான் காரணம் என்று குறை கூறுவதை கேட்டு எனக்கு அலுத்து போய்விட்டது. கிரிக்கெட் என்பது ஒரு அணியாக சேர்ந்து விளையாடுவது என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

ஹர்திக் பாண்ட்யா நல்ல நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர் ஒரு அணியை சிறப்பாக வழி நடத்துகிறார். ஒவ்வொரு நாளும் அணிக்காக அவர் கடுமையாக உழைப்பதை நான் என் கண்களால் பார்க்கின்றேன். ஹர்திக் பாண்ட்யா இன்னும் ஒரு ஆறு வாரத்தில் இந்திய அணிக்காக விளையாட போகிறார் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம்.

அப்போது நாம் அனைவரும் அவருக்கு ஆதரவாக தான் நிற்போம். அவர் அணிக்காக நன்றாக விளையாட வேண்டும் என்றும் ஆசைப்படுவோம். பாண்ட்யா பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் முதன்மையான நபராக இருக்கிறார். நிச்சயமாக இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்படுவார் என்று எனக்கு நம்பிக்கை இருக்கிறது.

அப்போது நான் அமைதியாக அமர்ந்து, அனைவரும் பாண்ட்யாவை பாராட்டுவதை நான் கேட்பேன். உங்களுக்கு வயது ஆக ஆக நீங்களும் மாற வேண்டும். இளம் வயதில் சில விஷயத்தை நீங்கள் உங்களுடைய ஸ்டைலில் செய்வீர்கள். ஆனால் வயதாகும் போது உங்களுக்கு பல பொறுப்புகள் வந்து சேரும். பாண்ட்யா மாறி வருவதை என்னால் பார்க்க முடிகிறது. தோனிக்கு நாம் எந்த திட்டம் வேண்டுமானாலும் தீட்டலாம்.

ஆனால் அவர் அடிக்க வேண்டும் என்று நினைத்தால், நிச்சயமாக அந்த மூன்று சிக்சரை அடித்திருப்பார். பாண்ட்யா மட்டும் அல்ல அந்த ஓவர் வேறு யாரு வீசி இருந்தாலும் தோனி 20 ரன்கள் அடித்திருப்பார். எம் எஸ் தோனி ஒரு உலகத்தரம் வாய்ந்த வீரர். தோனி அடித்த அந்த மூன்று சிக்சர் பிரச்சனை இல்லை. ஆனால் 20 ரன்கள் வித்தியாசத்தில் நாங்கள் தோற்றோம் என்பதுதான் வித்தியாசத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

நீங்கள் பார்ப்பதை விட கிரிக்கெட்டில் பல விஷயங்கள் அதையும் தாண்டி இருக்கின்றது. நாங்கள் எங்கு செல்கிறோம் என்பது குறித்து ஆராய்ந்து அதிலிருந்து எப்படி மீள்வது என்பது குறித்து நாங்கள் உழைப்போம். கண்டிப்பாக ஒரு பலமான அணியாக திரும்புவோம். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்