கடைசி 20 ஓவர் கிரிக்கெட்: இலங்கையை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஆறுதல் வெற்றி
இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
தம்புள்ளா,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 1 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வந்தது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கிலும் இலங்கை அணி கைப்பற்றியது.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில் நடைபெற்ற முதல் இரண்டு டி20 போட்டிகளிலும் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்த நிலையில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தம்புல்லாவில் நேற்றிரவு நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 5 விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ரமனுல்லா குர்பாஸ் 70 ரன்கள் (43 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர். அடுத்து களம் இறங்கிய இலங்கை அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 206 ரன்களே எடுக்க முடிந்தது.
வெற்றிக்கு கடைசி ஓவரில் 19 ரன் தேவைப்பட்ட போது, இலங்கை பேடஸ்மேன்கள் 15 ரன்களே எடுத்தனர். இதனால் ஆப்கானிஸ்தான் 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இருப்பினும் முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றிருந்ததால் தொடரை இலங்கை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆறுதல் வெற்றியுடன் ஆப்கானிஸ்தான் அணி இலங்கை பயணத்தை நிறைவு செய்துள்ளது.