கே.எல். ராகுல் ஓய்வா..? சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் தகவல்... உண்மை என்ன..?

இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் ஓய்வை அறிவித்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.

Update: 2024-08-23 09:20 GMT

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான கே.எல். ராகுல் நேற்று தனது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், "நான் விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடப் போகிறேன். காத்திருங்கள்" எனக் குறிப்பிட்டு இருந்தார்.

இதை அடுத்து சமூக வலைதளங்களில் அவர் என்ன சொல்லப் போகிறார்? என்ற எதிர்பார்ப்பு பெரிய விவாதமாக மாறியது. இதனிடையே சில சமூக வலைதள விஷமிகள் கே.எல். ராகுல் வெளியிட்டது போன்ற ஒரு பதிவை வெளியிட்டனர். அதில் கே.எல். ராகுல் தனது ஓய்வு அறிவிப்பை பற்றி பகிர்வது போன்ற வாசகங்களை இடம் பெறச் செய்தனர். இது சமூக வலைதளங்களில் தீயாய் பரவ தொடங்கியது. அதை பார்த்த ரசிகர்கள் பலரும் கே எல் ராகுல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாரா? என அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் பலரும் கூகுளில் இது குறித்து தேடத் துவங்கினர். அதன்பின், கே.எல். ராகுலின் ஓய்வு அறிவிப்பு பதிவு போலியானது என தெரிய வந்தது. வேறு ஒரு வீரர் வெளியிட்ட ஓய்வு அறிவிப்பின் பதிவை அப்படியே எடுத்துக் கொண்டு, அந்த வீரரின் பெயரை மாற்றி கே எல் ராகுல் பெயர் மற்றும் புகைப்படத்தை இடம் பெறச் செய்துள்ளனர்.

ஆனால், ராகுல் ஓய்வு அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. மேலும் முதலில் வெளியிட்ட பதிவு குறித்து இதுவரை அவர் எந்த தகவலையும் அறிவிக்கவில்லை. அவர் என்ன அறிவிப்பை வெளியிடப் போகிறார் என்பது இதுவரை தெரியவில்லை. ஆனால், அவரது ஓய்வு அறிவிப்பு போலியானது என்பது நிரூபணம் ஆகி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்