இன்னும் 8 சிக்ஸ் மட்டுமே... டெஸ்ட் கிரிக்கெட்டில் உலக சாதனை படைக்க உள்ள ஜெய்ஸ்வால்
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது.;
புதுடெல்லி,
வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. வரும் 19ம் தேதி இந்த தொடர் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ரோகித் சர்மா தலைமையில் நேற்று அறிவிக்கப்பட்டது.
இதில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரிஷப் பண்ட், கே.எல்.ராகுல், ஜஸ்ப்ரீத் பும்ரா உள்ளிட்ட வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தோடு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடிய ஜெய்ஸ்வால் இரண்டு இரட்டை சதங்கள் அடித்ததோடு 712 ரன்கள் குவித்து மிகப்பெரிய சாதனை படைத்தார். இதன் மூலமாக இந்திய அணி வெற்றி பெறுவதற்கு மிக முக்கிய காரணமாகவும் அமைந்தார்.
இதன் மூலம் இந்திய அணியில் நிலையான இடத்தை தக்க வைத்து கொண்ட ஜெய்ஸ்வால் எதிர்வரும் வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் உலக சாதனை ஒன்றை படைக்க வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் 26 சிக்சர்களை அடித்திருக்கும் ஜெய்ஸ்வால், இன்னும் 8 சிக்சர்கள் அடிக்கும் பட்சத்தில் ஒரு காலாண்டர் ஆண்டில் டெஸ்ட் தொடரில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை படைப்பார்.
இதற்கு முன்னதாக 2014-ம் ஆண்டு நியூசிலாந்து அணியை சேர்ந்த பிரண்டன் மெக்கலம் 33 சிக்சர்களை அடித்ததே இதுவரை அதிகபட்ச சாதனையாக இருக்கிறது. இந்திய அணி இந்த ஆண்டில் வங்காளதேசத்திற்கு எதிராக 2 டெஸ்ட், நியூசிலாந்திற்கு எதிராக 3 டெஸ்ட், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4 டெஸ்ட் (1 டெஸ்ட் போட்டி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடக்க உள்ளது) போட்டிகளில் ஆட உள்ளதால் இந்த சாதனையை ஜெய்ஸ்வால் எளிதில் படைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.