'இது உன்னுடைய நாள்' என்று அவர் சொன்னார் - ஆட்ட நாயகன் யாஷ் தாக்கூர் பேட்டி
லக்னோ தரப்பில் அபாரமாக பந்துவீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
லக்னோ,
ஐ.பி.எல் தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டாய்னிஸ் 58 ரன்கள் எடுத்தார். குஜராத் தரப்பில் உமேஷ் யாதவ், தர்ஷன் நல்கண்டே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதையடுத்து 164 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய குஜராத் அணி சிறப்பான தொடக்கம் கிடைத்தும் அதை பயன்படுத்த தவறியது. குஜராத் அணி 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 130 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 33 ரன் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.
லக்னோ தரப்பில் அபாரமாக பந்துவீசிய யாஷ் தாக்கூர் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. கடந்த 2 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்ற மயங்க் யாதவ் இப்போட்டியில் லேசாக காயமடைந்ததால் ஒரே ஒரு ஓவர் வீசியவுடன் வெளியேறிவிட்டார்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்ற பின் யாஷ் தாக்கூர் அளித்த பேட்டியில் கூறியதாவது, 5 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருது வென்றதில் மகிழ்ச்சி. கில்லுக்கு எதிராக நான் திட்டம் வகுத்தேன். அதை நான் பின்பற்றினேன். கே.எல். ராகுலும் அதையே செய்யுமாறு சொன்னது வேலை செய்தது.
துரதிஷ்டவசமாக மயங்க் யாதவ் காயமடைந்து விட்டார். எனவே இது உன்னுடைய நாள் என்பதால் அதை அதிகமாக பயன்படுத்திக் கொள் என்று கே.எல். ராகுல் என்னிடம் சொன்னார். ஐ.பி.எல் வரலாற்றில் நாங்கள் குஜராத்துக்கு எதிராக முதல் முறையாக வெற்றியை பதிவு செய்துள்ளோம். அதில் மிகவும் மகிழ்ச்சி. சுப்மன் கில் விக்கெட்டை எடுத்தது மறக்க முடியாததாக அமைந்தது. இவ்வாறு அவர் கூறினார்.