ராகுல் டிராவிட்டிற்காக உலகக்கோப்பையை வெல்வது எங்களது கடமை - ரோகித் சர்மா

உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

Update: 2023-11-18 15:50 GMT

Image Courtesy: BCCI

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின. இதையடுத்து உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி நாளை அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், ராகுல் டிராவிட்டிற்காக உலகக்கோப்பையை வெல்வது எங்களது கடமை என ரோகித் சர்மா கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

இந்திய கிரிக்கெட்டில் மிகப்பெரிய காரியங்களை ராகுல் டிராவிட் செய்துள்ளார். அவருடைய வேலை கண்டிப்பாக பெரியதாக இருக்கிறது. ராகுல் எப்படி கிரிக்கெட்டில் விளையாடினார் என்பதையும் நான் எப்படி விளையாடுகிறேன் என்பதும் உங்களுக்கு தெரியும். வெளிப்படையாக அது மாறுபட்டது.

ஆனாலும் நாங்கள் விளையாட விரும்பும் வழியில் சென்று சுதந்திரமாக விளையாடுவதற்கு போதுமான ஆதரவை கொடுப்பது அவரைப் பற்றி நிறைய சொல்லும். குறிப்பாக 2022 டி20 உலகக் கோப்பையில் அரையிறுதி வரை சென்று தோல்வியை சந்தித்த கடினமான நேரங்களில் அவர் அணி வீரர்களுக்காக நின்றார்.

அது போன்ற கடினமான நேரங்களில் அவர் ரியாக்ட் செய்து அதை இந்திய வீரர்களுக்கு தகவல்களாக கொடுத்த விதம் உதவியாக இருந்தது. உலகக்கோப்பையை வெல்லும் நிகழ்வில் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பது ராகுல் டிராவிட் ஆசை. அவருக்காக நாங்கள் வெற்றியை பெற்றுக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்