பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வந்தது கம்பீர்தான்... விராட் கோலி அல்ல - அமித் மிஸ்ரா

விராட் கோலியுடன் கவுதம் கம்பீர் சண்டையை மறந்து நட்பு பாராட்டியதாக அமித் மிஸ்ரா பாராட்டியுள்ளார்.

Update: 2024-07-16 06:02 GMT

மும்பை,

கடந்த 2023-ல் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் லக்னோ - ஆர்.சி.பி. அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது விராட் கோலி, லக்னோ அணியின் நவீன் உல் ஹக் மற்றும் கவுதம் கம்பீர் இடையே மோதல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து கவுதம் கம்பீர் மற்றும் நவீன் உல் ஹக் செல்லும் இடங்களில் எல்லாம் கோலி.. கோலி... என்று கோஷமிட்டு ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர். ஒரு கட்டத்தில் ரசிகர்களின் செயல்பாடுகள் எல்லை மீறியது.

இதன்பின் உலகக்கோப்பை தொடரின்போது நவீன் உல் ஹக்கை நேரடியாக அழைத்து விராட் கோலி கட்டி பிடித்து நட்பு பாராட்டினார். அதுமட்டுமல்லாமல் நவீன் உல் ஹக்கிற்கு ஆதரவாக ரசிகர்கள் கோஷம் எழுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இதன் பின் நவீன் உல் ஹக் - விராட் கோலி இடையிலான மோதல் முடிவுக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து இந்த வருட ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின்போது விராட் கோலி களத்தில் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். இதில் இடைவேளையின்போது மைதானத்திற்கு வந்த கொல்கத்தா அணியின் ஆலோசகரான கவுதம் கம்பீர், நேரடியாக விராட் கோலியை அழைத்து கட்டிப்பிடித்து நட்பு பாராட்டினார். அனைவரும் களத்தில் மிகப்பெரிய மோதல் இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், சூழலை இருவரும் சாதாரணமாக கடந்து சென்றனர்.

இந்நிலையில் சீனியர் என்ற முறையில் விராட் கோலி தான் தாமாக சென்று கௌதம் கம்பீரிடம் பேசி பிரச்சினையை முடித்திருக்க வேண்டும் என்று அமித் மிஸ்ரா தெரிவித்துள்ளார். இருப்பினும் கவுதம் கம்பீர் பெரிய மனதுடன் சண்டையை மறந்து நட்பு பாராட்டியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு:-

"கவுதம் கம்பீரின் நல்ல குணத்தை நான் பார்த்தேன். விராட் கோலி அவரிடம் செல்லவில்லை. கம்பீர் தான் விராட் கோலியிடம் சென்றார். அவரிடம் சென்ற கம்பீர் எப்படி இருக்கிறீர்கள் உங்களுடைய குடும்பம் எப்படி இருக்கிறது என்று நலம் விசாரித்தார். அந்த வகையில் கம்பீர் தான் பிரச்சனையை முடித்தார். விராட் கோலி அல்ல. எனவே அந்த நேரத்தில் கம்பீர் பெரிய இதயத்தை காட்டினார். உண்மையில் விராட் கோலிதான் கம்பீர் பாய் 'இதை முடித்துக் கொள்வோம்' என்று சொல்லி அந்த பிரச்சினையை முடித்திருக்க வேண்டும்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்