உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய இங்கிலாந்து: "இது மிகவும் வேதனை அளிக்கிறது" - ஜோஸ் பட்லர்

வங்காள தேசத்தைத் தொடர்ந்து இரண்டாவது அணியாக உலகக் கோப்பை தொடரில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறியது.

Update: 2023-11-04 20:14 GMT

ஆமதாபாத்,

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, நடப்பு சாம்பியன் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

'டாஸ்' ஜெயித்த இங்கிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் 286 ரன்னில் 'ஆல்-அவுட்' ஆனது. இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், மார்க்வுட், அடில் ரஷித் தலா 2 விக்கெட்டும், டேவிட் வில்லி, லிவிங்ஸ்டன் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

பின்னர் 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இங்கிலாந்து அணி 48.1 ஓவர்களில் 253 ரன்னில் அடங்கியது. இதனால் ஆஸ்திரேலிய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஆடம் ஜம்பா 3 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க், ஹேசில்வுட், கம்மின்ஸ் தலா 2 விக்கெட்டும், மார்கஸ் ஸ்டோனிஸ் ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

7-வது ஆட்டத்தில் ஆடிய ஆஸ்திரேலிய அணி 5-வது வெற்றியை ருசித்து அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது. முதல் 2 ஆட்டங்களில் தோல்வி கண்ட அந்த அணி அதன் பிறகு தொடர்ச்சியாக 5 வெற்றிகளை வசப்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில் 6-வது தோல்வியை சந்தித்த இங்கிலாந்து, இரண்டாவது அணியாக உலகக் கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. இது இங்கிலாந்து அணி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர், "நடப்பு உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணியின் செயல்பாடு மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது. நாங்கள் ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் இதை தான் தொடர்ந்து பேசி வருகிறோம். இன்றைய ஆட்டத்தில் கூட எங்களுடைய செயல்பாட்டில் சில முன்னேற்றம் இருந்தது. ஆனால் வெற்றி பெற அது போதவில்லை.

நாங்கள் இந்தியாவுக்கு உலகக்கோப்பை தொடரில் விளையாட வரும் போது அதிக நம்பிக்கையுடன் வந்திருந்தோம். ஆனால் எங்களுக்கு கிடைத்திருக்கும் முடிவை பார்த்து மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. நிச்சயமாக வலிக்கிறது. எங்களுடைய திறமைக்கு நாங்கள் நியாயம் சேர்க்கவில்லை. 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையும் வென்று விட்டு இப்படி ஒரு தோல்வியை தருவது மனது ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

எங்களுடைய ரசிகர்களை நாங்கள் ஏமாற்றி விட்டது போல் நினைக்கிறோம். ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்யும்போது ஜாம்பா மற்றும் மிட்சல் ஸ்ட்ராக் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தது எங்கள் தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அவர்களை விரைவில் வீழ்த்தி இருந்தோம் என்றால் நாங்கள் துரத்த வேண்டிய இலக்கு 30 ரன்கள் குறைந்திருக்கும்.

இந்த உலகக்கோப்பை தொடரில் என்னுடைய தனிப்பட்ட பேட்டிங் மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கிறது. நான் நல்ல மனநிலையில் இந்த தொடரில் விளையாட வந்தேன். ஆனால் இதை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. மீண்டும் பார்மை நோக்கி செல்ல வேண்டும் என்றால் தொடர்ந்து விளையாட வேண்டும். அதை தான் நாங்கள் செய்யப் போகிறோம்" என்று அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்