எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் பரவாயில்லை...நான் இங்கு வந்தது இதற்காகதான் - டேரில் மிட்செல்

சென்னை தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

Update: 2024-04-09 02:07 GMT

Image Courtesy: Twitter 

சென்னை,

ஐ.பி.எல் தொடரில் நேற்று சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய கொல்கத்தா அணி சென்னையின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

20 ஓவர்கள் முழுமையாக பேட்டிங் செய்த கொல்கத்தா 9 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. கொல்கத்தா தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 34 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதையடுத்து 138 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணி 17.4 ஓவரில் 3 விக்கெட்டை மட்டும் இழந்து 141 ரன் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக கெய்க்வாட் 67 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து இந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜடேஜாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. முன்னதாக இந்த போட்டியில் அஜிங்க்ய ரகானே திடீரென காயத்தை சந்தித்ததால் டேரில் மிட்சேல் 3வது இடத்தில் பேட்டிங் செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

அந்த வாய்ப்பில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சர் அடித்த அவர் 25 (19) ரன்கள் எடுத்து சுனில் நரேன் பந்தில் அவுட்டானார். இந்நிலையில் பேட்டிங்கில் எந்த இடம் கிடைத்தாலும் அந்த இடத்தில் ஆடி அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுப்பதே தம்முடைய வேலை என டேரில் மிட்சேல் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,

பிட்ச்சில் மேற்பரப்பு மெதுவாக இருந்ததால் முடிந்தளவு போட்டியை ஆழமாக எடுத்து செல்ல வேண்டும் என்பதே எங்களுடைய திட்டமாகும். நரேன் ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர். என்னைப் பொறுத்த வரை சில திட்டங்களுடன் வந்து அவர்களுக்கு அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என்பதே இலக்காகும்.

அது எனக்கு வேலையும் செய்தது. ருதுராஜ் கடைசி வரை விளையாடியதைப் பார்த்தது நன்றாக இருந்தது. நான் எங்கே பேட்டிங் செய்தாலும் பரவாயில்லை. விளையாட்டில் வெற்றி பெறுவதற்காகவே இங்கு நான் வந்துள்ளேன். அதை செய்ததில் மகிழ்ச்சி. இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்