இரானி கோப்பை கிரிக்கெட்: சவுராஷ்டிரா அணி முன்னிலை - அணியில் 4 வீரர்கள் அரைசதம் அடித்தனர்

இரானி கோப்பை கிரிக்கெட்டில் சவுராஷ்டிரா அணியில் 4 வீரர்கள் அரைசதம் அடித்தனர்.

Update: 2022-10-03 19:18 GMT

Image Courtesy: BCCI Domestic 

ராஜ்கோட்,

முன்னாள் ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா- ரெஸ்ட் ஆப் இந்தியா அணிகள் இடையிலான இரானி கோப்பை கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் சவுராஷ்டிரா 98 ரன்களும், ரெஸ்ட் ஆப் இந்தியா 374 ரன்களும் எடுத்தன. 276 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய சவுராஷ்டிரா 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 49 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய சவுராஷ்டிரா ஒரு கட்டத்தில் 5 விக்கெட்டுக்கு 87 ரன்களுடன் தத்தளித்தது. இதில் மூத்த பேட்ஸ்மேன் புஜாரா 1 ரன்னில் வீழ்ந்ததும் அடங்கும். இதனால் ரெஸ்ட் ஆப் இந்தியா இன்னிங்ஸ் வெற்றியை அடையக்கூடிய ஒரு சூழல் உருவானது.

ஆனால் பின்வரிசையில் வந்த சவுராஷ்டிரா வீரர்கள் நிலைத்து நின்று ஆடி நிலைமையை அதிரடியாக மாற்றிக் காட்டினர். ஷெல்டன் ஜாக்சன் (71 ரன்), அர்பித் வசவதா (55 ரன்), பிரேராக் மன்கட் (72 ரன்), கேப்டன் ஜெய்தேவ் உனட்கட் (78 ரன், நாட்-அவுட்) ஆகியோர் அரைசதம் அடித்து அசத்தியதுடன் அணி முன்னிலை பெறவும் உதவினர்.

நேற்றைய முடிவில் சவுராஷ்டிரா 98 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 368 ரன்கள் சேர்த்து 92 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. ஆனாலும் இன்னும் ரெஸ்ட் ஆப் இந்தியாவின் கை தான் ஓங்கி நிற்கிறது என்பதில் சந்தேகமில்லை. 4-வது நாள் ஆட்டம் இன்று நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்