பிளே ஆப் போட்டி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டால் மாற்று வழி என்ன ? - வெளியான தகவல்

மோசமான வானிலை காரணமாக ஈடன் கார்டன் மைதானத்தின் முக்கிய பகுதி சேதமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2022-05-23 08:33 GMT

Image Courtesy : Twitter / IPL

https://www.dailythanthi.com/Sports/Cricket/rains-wreak-havoc-at-eden-gardens-press-box-damaged-due-to-thunderstorm-ahead-of-playoffs-in-kolkata-705501

மும்பை,

ஐபிஎல் பிளே ஆப் சுற்றுக்கு குஜராத், லக்னோ, ராஜஸ்தான் , பெங்களூரு அணிகள் தகுதி பெற்றுள்ளன. நாளை நடைபெறும் முதல் தகுதி சுற்று போட்டியில் குஜராத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சமீபத்தில் கொல்கத்தாவில் உருவான புயல் காரணமாக அங்கு கடும் மழை பெய்தது. இதில் ஈடன் கார்டன் மைதானத்தின் முக்கிய பகுதி சேதமடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி மோசமான வானிலை காரணமாக குஜராத் அணி திட்டமிடப்பட்ட நேரத்தில் கொல்கத்தா சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டது. மழைக்காரணமாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நேற்று முன்தினம் மாலை மைதானத்தை நேரில் சென்று பார்வையிட்டார்.

பிசிசிஐ தரப்பில் போட்டி நடைபெறும் நாளுக்கு முன்னதாக மைதானம் தயார் நிலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டு இருந்தாலும் அடுத்தடுத்த நாட்களில் மழை தொடரும் பட்சத்தில் போட்டி நடைபெறுவது கேள்விக் குறியாகும்.

ஒரு வேளை இந்த போட்டி மோசமான வானிலை காரணமாக தடைப்பட்டால் ஐபிஎல் விதிமுறைகளின் படி என்ன முடிவு எட்டப்படும் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. போட்டி முழுவதுமாக நடைபெற வாய்ப்பு இல்லை என்றால் நேரத்திற்கு தகுந்தவாறு ஓவர்கள் குறைக்கப்படும். இறுதியில் சூப்பர் ஓவராக கூட போட்டி மாற வாய்ப்புள்ளது.

அவ்வாறும் ஒரு ஓவர் கூட வீச சாத்தியமில்லை என்றால் தகுதி சுற்று 1, எலிமினேட்டர், தகுதி சுற்று 2 போட்டிகளுக்கு லீக் போட்டிகளின் முடிவில் முன்னிலை பெற்றுள்ள அணி வெற்றியாளராக அறிவிக்கப்படும் என்று ஐபிஎல் விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல் தகுதி சுற்று 1, எலிமினேட்டர், தகுதி சுற்று 2 போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்கள் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது திட்டமிட்ட நாளில் போட்டி நடைபெறவில்லை என்றால் அதற்கு மாற்று நாள் ரிசர்வ் நாளாக கருதப்படுகிறது. இறுதி போட்டிக்கு மட்டும் ரிசர்வ் நாளாக மே 30 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்