இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறுகிறார் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி
இந்திய மகளிர் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி இங்கிலாந்துக்கு எதிரான தொடருடன் ஓய்வு பெறுகிறார்.
புதுடெல்லி,
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. இங்கிலாந்தில் இந்தியா மூன்று டி-20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் செப்டம்பர் 10-ம் தேதி முதல் தொடங்குகிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி-20 போட்டி டர்ஹாமில் செப்டம்பர் 10-ம் தேதி நடைபெறுகிறது. இரண்டாவது டி-20 செப்டம்பர் 13-ம் தேதியும், செப்டம்பர் 15-ம் தேதி பிரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் 3-வது போட்டியும் நடைபெறுகிறது.
இதை தொடர்ந்து செப்டம்பர் 18-ல் தொடங்கும் ஒருநாள் போட்டி செப்டம்பர் 24-ல் முடிவடைகிறது. இந்த நிலையில் இந்த தொடருக்கான இந்திய மகளிர் அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் கேப்டனாக ஹர்மன்ப்ரீத் கவுர் நியமிக்கப்பட்டுள்ளார். துணை கேப்டனாக ஸ்மிருதி மந்தனா செயல்படவுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் மட்டும் இந்திய சீனியர் வேகப்பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
39 வயதான இவர் கடைசியாக கடந்த மார்ச் மாதம் நியூசிலாந்தில் நடந்த உலக கோப்பையில் விளையாடினார். சமீபத்தில் பர்மிங்காமில் நடந்த காமன்வெல்த் போட்டியிலும், இலங்கை தொடரிலும் அவர் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் வேகப்பந்து வீச்சாளர் ஜூலன் கோஸ்வாமிக்கு பிரியாவிடை போட்டியை ஏற்பாடு செய்துள்ளது. லார்ட்ஸில் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டி அவரது கடைசிப் போட்டியாக இருக்கும் என்று பிசிசிஐ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மார்ச் 2002-ல் கோஸ்வாமி தனது முதல் சர்வதேச போட்டியில் விளையாடினார். 20 ஆண்டுகளில் அவர் 12 டெஸ்ட், 68 டி-20 போட்டிகள் மற்றும் 201 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் ஆறு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் பங்கேற்றுள்ளார். ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (252) எடுத்த வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.