அயர்லாந்துக்கு எதிரான தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்தில் இந்தியா- கடைசி 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது

அயர்லாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரை முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று கடைசி ஆட்டத்தில் களம் இறங்குகிறது.

Update: 2023-08-23 00:15 GMT

டப்ளின்,

20 ஓவர் கிரிக்கெட்

இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் மழையால் பாதியில் நிறுத்தப்பட்ட முதல் ஆட்டத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' விதிப்படி 2 ரன் வித்தியாசத்தில வெற்றி பெற்ற இந்தியா, 2-வது ஆட்டத்தில் 33 ரன் வித்தியாசத்தில் அயர்லாந்தை தோற்கடித்து தொடரையும் கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா- அயர்லாந்து மோதும் 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி டப்ளினில் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. தொடரை இந்தியா வசப்படுத்தி விட்டதால் இந்த ஆட்டத்தின் முடிவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது. எனவே இந்திய அணியில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும். இதுவரை வாய்ப்பு அளிக்கப்படாத விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மா, சுழற்பந்து வீச்சாளர் ஷபாஸ் அகமது, வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் ஆகியோருக்கு இடம் அளிப்பது குறித்து அணி நிர்வாகம் பரிசீலிக்கிறது.

அதே சமயம் காயத்தில் இருந்து மீண்டு இந்த தொடரின் மூலம் மறுபிரவேசம் செய்துள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா முதல் இரு ஆட்டங்களில் தலா இரு விக்கெட் வீதம் வீழ்த்தி கவனத்தை ஈர்த்தனர். என்றாலும் தங்களது உடல்தகுதியை இன்னும் சோதித்து பார்க்க இன்றைய ஆட்டத்திலும் களம் காண்பார்கள். கடந்த ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட்டின் அரைசதமும் (58 ரன்), புதுமுக வீரர் ரிங்கு சிங்கின் அதிரடி ஜாலமும் (2 பவுண்டரி, 3 சிக்சருடன் 38 ரன்) வெற்றியை எளிதாக்கியது. அதே ரன்வேட்டையை கடைசி ஆட்டத்திலும் வெளிப்படுத்த ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். எதிர்பார்க்கப்பட்ட இடக்கை பேட்ஸ்மேன் திலக் வர்மா (0 மற்றும் 1 ரன்) அவசரகதியில் ஷாட்டுகளை அடித்து ஏமாற்றம் அளித்தார். இன்றைய ஆட்டத்தில் அவர் கவனமுடன் மட்டையை சுழற்றுவார் என்று நம்பலாம். மொத்தத்தில் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வெல்லும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாக உள்ளனர்.

வரலாறு படைக்கும் நோக்கில் அயர்லாந்து

அயர்லாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் பால் ஸ்டிர்லிங், விக்கெட் கீப்பர் லோர்கன் டக்கர் ஆகியோர் இரு ஆட்டங்களிலும் சோபிக்காதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது. முந்தைய ஆட்டத்தில் ஆன்டி பால்பிர்னி 72 ரன் விளாசி ஸ்கோர் 150 கடக்க உதவினார். மற்ற பேட்ஸ்மேன்களும் ஒருசேர கைகொடுத்தால் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

அயர்லாந்து அணி இந்தியாவுக்கு எதிராக இதுவரை எந்த வடிவிலான போட்டிகளிலும் (3 ஒரு நாள் போட்டியில் தோல்வி மற்று ஏழு 20 ஓவர் ஆட்டங்களில் தோல்வி) வெற்றி பெற்றதில்லை. எனவே சாதகமான உள்ளூர் சூழலில் இந்தியாவை தோற்கடித்து வரலாறு படைக்க வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுவார்கள்.

இரவு 7.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, ரிங்கு சிங், சஞ்சு சாம்சன் அல்லது ஜிதேஷ் ஷர்மா, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது, அர்ஷ்தீப்சிங் அல்லது அவேஷ்கான், ரவி பிஷ்னோய், ஜஸ்பிரித் பும்ரா (கேப்டன்), பிரசித் கிருஷ்ணா.

அயர்லாந்து: பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), ஆன்டி பால்பிர்னி, லோர்கன் டக்கர், ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்ப்பெர், ஜார்ஜ் டாக்ரெல், மார்க் அடைர், பாரி மெக்கர்த்தி, பியான் ஹேன்ட் அல்லது கிரேக் யங், ஜோஷ் லிட்டில், பென் ஒயிட் அல்லது தியோ வான் வார்கோம்.

இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ சினிமா செயலியிலும் பார்க்கலாம். ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Tags:    

மேலும் செய்திகள்