சர்வதேச டி20 கிரிக்கெட்டில் வரலாற்று சாதனை படைத்த வருண் சக்ரவர்த்தி

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் வருண் சக்ரவர்த்தி மொத்தம் 12 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.

Update: 2024-11-16 11:06 GMT

ஜோகன்னஸ்பர்க்,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளின் முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்ரர்ஸ் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆரம்பம் முதலே அதிரடியில் வெளுத்து வாங்கியது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 283 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக திலக் வர்மா 120 ரன்களும், சாம்சன் 109 ரன்களும் குவித்து அசத்தினர்.

இதனையடுத்து 284 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி ஆடிய தென் ஆப்பிரிக்க அணி வெறும் 18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 148 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இந்தியா 135 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப்சிங் 3 விக்கெட்டுகளும், வருண் சக்ரவர்த்தி, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

இந்த தொடரில் இந்திய சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்ரவர்த்தி மொத்தம் 12 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் 4 அல்லது அதற்கும் குறைவான போட்டிகள் கொண்ட இரு தரப்பு தொடர்களில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளர் என்ற மாபெரும் வரலாற்று சாதனையை வருண் சக்ரவர்த்தி படைத்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்