வங்காளதேசத்திற்கு எதிராக பாகிஸ்தானின் தோல்விக்கு இந்தியாதான் காரணம் - ரமீஸ் ராஜா வேதனை

வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்தது.;

Update:2024-08-26 17:28 IST

லாகூர்,

பாகிஸ்தான்-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்றது. இந்த போட்டியில் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் தோற்றது. அதனால் பாகிஸ்தானுக்கு எதிராக முதல் முறையாக ஒரு டெஸ்ட் போட்டியில் வென்று வங்காளதேசம் புதிய சாதனை படைத்தது. அதனால் அந்நாட்டு முன்னாள் வீரர்களும் ரசிகர்களும் பாகிஸ்தான் அணியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 2023 ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் வாங்கிய அடியிலிருந்து இன்னும் பாகிஸ்தான் எழுந்திருக்கவில்லை என முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா வேதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "முதலில் அணி தேர்விலேயே தவறு இருக்கிறது. நீங்கள் ஸ்பின்னர் இல்லாமலேயே விளையாடினீர்கள். 2-வதாக நட்சத்திர அந்தஸ்தை கொண்ட நம்முடைய முடிந்து போன வேகப்பந்து வீச்சாளர்களை சார்ந்திருப்பது தவறானதாகும். இந்த தோல்வி, ஒரு வகையான நம்பிக்கை நெருக்கடி ஆகியவை கடந்த ஆசிய கோப்பையின்போது இந்தியாவிடம் நமது வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்துக்கு சாதகமான சூழ்நிலைகளில் அடி வாங்கியதிலிருந்து தொடங்கியது. அங்கேதான் நமது பவுலிங் அட்டாக்கை எப்படி அடித்து நொறுக்க வேண்டும் என்ற ரகசியம் உலகிற்கு அம்பலமானது.

உண்மையில் நம்முடைய வேகப்பந்து வீச்சாளர்களை விட வங்காளதேசத்தினர் சிறப்பாக செயல்பட்டனர். மேலும் 125 - 135 கிலோமீட்டர் வேகத்திற்குள் வீசிய நமது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வங்காளதேசம் பேட்டிங் வரிசை உயர்ந்து நின்றது. ஷான் மசூத் தற்போது தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். ஆஸ்திரேலிய மண்ணில் பாகிஸ்தான் தொடரை வெல்வது அசாத்தியம் என்பது போல உணர்ந்தோம்.

ஆனால் தற்போது நீங்கள் வங்காளதேசம் போன்ற அணிக்கு எதிராக சொந்த மண்ணில் சூழ்நிலைகளை படிக்காமல் தோற்றுள்ளீர்கள். மசூத் தனது பேட்டிங்கை முன்னேற்ற வேண்டும். பிஎஸ்எல் மற்றும் கவுண்டி தொடர்களில் கேப்டனாக செயல்பட்ட அவருக்கு ராவில்பிண்டியில் இந்த மாதிரியான அணியை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பது தெரியவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்