இந்தியா-இலங்கை 2-வது ஒரு நாள் கிரிக்கெட்: கொல்கத்தாவில் இன்று நடக்கிறது

இலங்கைக்கு எதிரான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியிலும் அதிரடியை காட்டும் உத்வேகத்துடன் இந்திய அணி இன்று கொல்கத்தாவில் களம் இறங்குகிறது.

Update: 2023-01-11 23:56 GMT



கொல்கத்தா,

இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கவுகாத்தியில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1 -0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன்கார்டனில் இன்று (வியாழக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

முதல் ஆட்டத்தில் இந்திய அணி விராட்கோலியின் சதம் மற்றும் சுப்மான் கில், ரோகித் சர்மா ஆகியோரது அரைசதத்தால் 373 ரன்களை திரட்டி மலைக்க வைத்தது. பந்துவீச்சில் தொடக்கத்தில் மிரட்டிய இந்திய பவுலர்கள் கடைசி கட்டத்தில் கோட்டை விட்டனர். இதனால் தான் இலங்கை அணியால் 300 ரன்களை கடக்க முடிந்தது. எனவே பந்துவீச்சில் கூடுதல் கவனம் அவசியமாகும்.

சாதனையின் விளிம்பில் இருக்கும் விராட்கோலி இன்னும் ஒரு சதம் அடித்தால் ஒரு அணிக்கு எதிராக 10 சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைப்பார். ரோகித் சர்மா இதே மைதானத்தில் 8 ஆண்டுக்கு முன்பு இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியதை மறந்து விட முடியாது. இதே போன்ற ஒரு ருத்ரதாண்டவ இன்னிங்சை ரோகித் சர்மா காட்டுவாரா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

ஷனகா- நிசாங்கா

இலங்கை அணியை எடுத்துக் கொண்டால் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் தான் தொடரை கைப்பற்றுவ தற்கான வாய்ப்பில் நீடிக்க முடியும். முதல் ஆட்டத்தில் கேப்டன் தசுன் ஷனகாவின் அதிரடியான செஞ்சுரியும், பதும் நிசாங்காவின் 72 ரன் சேர்ப்பும் இலங்கைக்கு ஆறுதல் தந்தது. பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கிலும் கச்சிதமாக செயல்பட்டால் இதை விட பலமாக இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம். இல்லாவிட்டால் சரிவில் இருந்து மீள்வது கடினம் தான்.

கவுகாத்தி போட்டியில் வலது தோள்பட்டையில் காயமடைந்த வேகப்பந்து வீச்சாளர் மதுஷன்கா இன்றைய ஆட்டத்தில் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது. மற்றபடி அந்த அணியில் மாற்றம் இருக்காது.

புகழ்பெற்ற கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 21 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 12-ல் வெற்றியும், 8-ல் தோல்வியும் சந்தித்துள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இலங்கை அணி இங்கு 8 ஆட்டங்களில் ஆடி 3-ல் வெற்றியும், 4-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. கடைசியாக 2017-ம் ஆண்டு இங்கு ஒரு நாள் போட்டி நடந்தது. அதில் 252 ரன்கள் எடுத்த இந்தியா ஆஸ்திரேலியாவை 202 ரன்னில் கட்டுப்படுத்தி வெற்றி கண்டது நினைவு கூரத்தக்கது.

பிற்பகல் 1.30 மணிக்கு...

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக், யுஸ்வேந்திர சாஹல்.

இலங்கை: பதும் நிசாங்கா, அவிஷ்கா பெர்னாண்டோ, குசல் மென்டிஸ், சாரித் அசலங்கா, தனஞ்ஜெயா டி சில்வா, தசுன் ஷனகா (கேப்டன்), ஹசரங்கா, வெல்லாலகே, சமிகா கருணாரத்னே, கசுன் ரஜிதா, மதுஷன்கா அல்லது லாஹிரு குமாரா.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

'ஷனகாவுக்கு ஐ.பி.எல்.-ல் ஆடும் வாய்ப்பு கிடைக்கும்' - சில்வர்வுட்

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கலக்கிய இலங்கை கேப்டனும், ஆல்-ரவுண்டருமான தசுன் ஷனகா நேற்று முன்தினம் முதலாவது ஒரு நாள் போட்டியில் 88 பந்துகளில் 108 ரன்கள் நொறுக்கினார். இதனால் அவருக்கு ஐ.பி.எல். போட்டியில் விளையாடும் அதிர்ஷ்டம் கிட்டும் என்று அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறியுள்ளார் 'ஷனகா தன்னிடம் உள்ள திறமை என்ன என்பதை உலகுக்கு நிரூபித்து காட்டியுள்ளார். அதிரடியாக ஆடக்கூடிய அவரை நிச்சயம் ஐ.பி.எல். அணிகள் கவனத்தில் வைத்திருக்கும். ஐ.பி.எல். வாய்ப்பு அவருக்கு கிடைக்கும் என்று நம்புகிறேன்' என்று சில்வர்வுட் குறிப்பிட்டார். கடந்த மாதம் கொச்சியில் நடந்த ஐ.பி.எல். ஏலத்தில் ஷனகாவுக்கு ரூ.50 லட்சம் தொடக்க விலையாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவரை யாரும் ஏலத்தில் எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்