இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளரை கண்டு பிடித்துள்ளது - மயங்க் யாதவை பாராட்டிய பிரட் லீ
நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேகமான (155.80 கி.மீ) பந்தை வீசிய பவுலர் என்ற மிரட்டலான சாதனையை மயங்க் யாதவ் படைத்துள்ளார்.
லக்னோ,
ஐ.பி.எல் தொடரில் நேற்று லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் பஞ்சாபை வீழ்த்தி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய லக்னோ 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 200 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் முதல் விக்கெட்டுக்கு 102 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் எளிதில் வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பஞ்சாப் அணியால் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் லக்னோ அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ அணி தரப்பில் சிறப்பாகவும், அதிவேகமாகவும் பந்துவீசிய 21 வயதான மயங்க் யாதவ் 3 விக்கெட்டுகளை எடுத்து போட்டியை தலைகீழாக மாற்றினார். மயங்க் யாதவ் ஆரம்பம் முதலே 145 - 150 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். ஷிகர் தவானுக்கு எதிராக 155.80 கி.மீ என்ற உச்சகட்டமான வேகத்தில் ஒரு பந்தை வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
மேலும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேகமான (155.80 கி.மீ) பந்தை வீசிய பவுலர் என்ற மிரட்டலான சாதனையை மயங்க் யாதவ் படைத்தார். இவரின் அபாரமான பந்துவீச்சை அடுத்து அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது. இதையடுத்து மயங்க் யாதவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் மயங்க் யாதவை ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீயும் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது, இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளரை கண்டு பிடித்துள்ளது. மயங்க் யாதவ், மிரட்டலான வேகம். மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.