ஆஸி.க்கு எதிரான ஒருநாள் போட்டியில் வெற்றி: ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம்...!

ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய மூன்று வகையான போட்டி தொடரிலும் ஐசிசி தரவரிசையில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது.

Update: 2023-09-22 17:43 GMT

டெல்லி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள், 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் இன்று நடைபெற்றது.

இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 276 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 48.4 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 281 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றிபெற்றது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்ற நிலையில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

இதில், 116 புள்ளிகள் பெற்று ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்தியா முதல் இடம் பிடித்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக 115 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 2ம் இடத்தில் உள்ளது.

அதேபோல், ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் 118 புள்ளிகளுடனும், டி20 தரவரிசையில் 264 புள்ளிகளுடனும் இந்தியா முதல் இடத்தில் உள்ளது. இதன் மூலம் ஐசிசி கிரிக்கெட் தரவரிசையில் ஒருநாள், டெஸ்ட், டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் இந்தியா முதல் இடம் பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது.  

Tags:    

மேலும் செய்திகள்