நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன்: சிஎஸ்கே முன்னாள் வீரர்
நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், ஜெய்ஸ்வாலை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன் என சிஎஸ்கே முன்னாள் வீரர் கூறியுள்ளார்
கொல்கத்தா,
ஐபிஎல் தொடர் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதில் நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டத்தால் 150 ரன் இலக்கை 13 வது ஓவரிலேயே அடைந்து ராஜஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 13 பந்துகளில் அரைசதம் அடித்து ஐபிஎல் வரலாற்றில் குறைந்த பந்தில் அரைசதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையை படைத்தார். அவர் இந்த ஆட்டத்தில் 98 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். மேலும், இந்த வருட ஐபிஎல் சீசனில் அதிக ரன் குவித்தவர் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளார்.
முதல் இடத்தில் உள்ள டு பிளிஸ்சிஸ்க்கும் ஜெய்ஸ்வாலுக்கும் 1 ரன் மட்டுமே வித்தியாசம். இவர் அனைத்து விதமான மைதானங்களிலும் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணிகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறார். இந்நிலையில், ஜெய்ஸ்வாலின் அதிரடி ஆட்டம் குறித்து சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா கூறும்போது,
நான் இந்திய தேர்வாளராக இருந்திருந்தால், அவர் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பதால், அவரை உலகக் கோப்பைக்கு இன்றே ஒப்பந்தம் செய்திருப்பேன்.
அவர் எனக்கு வீரேந்திர சேவாக்கை நினைவுபடுத்துகிறார். ரோகித் சர்மா இதைப் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். ஏனெனில் அவர் உலகக் கோப்பைக்காக அவரைப் போன்ற பேட்ஸ்மேன்களை தேடுவார்.
இவ்வாறு அவர் கூறினார்.