ஐ.சி.சி. ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசை: ஆப்கானிஸ்தான் வீரர் குர்பாஸ் சாதனை
ஒருநாள் போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.;
துபாய்,
ஆப்கானிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் இங்கிலாந்து - ஆஸ்திரேலியா இடையே 3 ஒருநாள் போட்டிகள் ( 5 போட்டிகள் கொண்ட தொடர்) முடிவடைந்துள்ளன.
இதில் வீரர்களின் செயல்பாடுகளை கணக்கில் கொண்டு வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ளது.
அதில் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 4 இடங்களில் பாபர் அசாம், ரோகித் சர்மா, கில், விராட் கோலி ஆகியோர் மாற்றமின்றி தொடருகின்றனர்.
இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ஆப்கானிஸ்தான் வீரர் ரஹ்மனுல்லா குர்பாஸ் 10 இடங்கள் முன்னேறி 8-வது இடத்தை பிடித்துள்ளார். இதன் மூலம் ஐ.சி.சி. ஒருநாள் போட்டிகளின் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் டாப் 10 இடத்திற்குள் வந்த முதல் ஆப்கானிஸ்தான் வீரர் என்ற மாபெரும் சாதனையை குர்பாஸ் படைத்துள்ளார். மேலும் ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 7 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் தென்ஆப்பிரிக்காவின் கேஷவ் மகராஜ் முதலிடமும், ஆஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்திலும் உள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க மாற்றமாக ரஷித்கான் 8 இடங்கள் ஏற்றம் அடைந்து 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். இந்திய வீரர்களில் குல்தீப் யாதவ் 4-வது இடத்திலும், பும்ரா 8-வது இடத்திலும், முகமது சிராஜ் 9-வது இடத்திலும் உள்ளனர்.
ஆல் ரவுண்டர்கள் தரவரிசையில் பெரிய அளவில் மாற்றமில்லை.