மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான அதிகாரப்பூர்வ பாடலை வெளியிட்ட ஐ.சி.சி
மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது.
துபாய்,
10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இந்த தொடரை முன்னிட்டு 10 நாடுகளும் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில், இந்த தொடருக்கான அதிகாரப்பூர்வ பாடலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டது. பிரபல பாடகிகள் ரியா துகால், சிம்ரன் துகால், ஸோ சித்தார்த், சுசிதா ஷர்க் ஆகியோர் அடங்கிய 'WISH' மகளிர் இசைக்குழுவினர் 'வாட்எவர் இட் டேக்ஸ்' என்ற இந்த பாடலை பாடியுள்ளனர்.
பே மியூசிக் சவுத் நிறுவனம் தயாரித்துள்ள இந்த பாடலுக்கு பார்த் பரேக் இசையமைக்க, மிக்கி மெக்லியாரி இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பத்தின் வீடியோவும் நேற்று யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.