உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக என்னை சோதிக்க விரும்புகிறேன் - தென் ஆப்பிரிக்க பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஸி
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.;
கேப்டவுன்,
இந்திய கிரிக்கெட் அணி தற்போது தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் சமனில் முடிவடைந்த நிலையில், ஒருநாள் தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி நாளை மறுதினம் நடைபெற உள்ளது.
இந்நிலையில் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக தம்மை சோதிக்க விரும்புவதாக தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜெரால்டு கோட்ஸி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், 'இந்திய அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடர் என்பது கடினமான ஒன்றாகவே இருக்கும். நான் உலகின் தலைசிறந்த வீரர்களுக்கு எதிராக என்னை சோதிக்க விரும்புகிறேன். அந்த வகையில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவருக்கு எதிராக என்னுடைய திறமையை வெளிக்காட்ட வேண்டும் என்று நினைக்கிறேன். நான் எப்பொழுதுமே போட்டியை விரும்பி விளையாடக்கூடிய நபராகவே இருந்துள்ளேன்.
இந்த இரண்டு ஜாம்பவான்களுக்கு எதிராக என்னை நான் பரிசோதிக்க நினைக்கிறேன். அவர்களுக்கு எதிராக நான் சவால் அளிக்கும் வகையில் பந்துவீச முயற்சிப்பேன். என்னைப் போன்ற பல வீரர்களை அவர்கள் எதிர் கொண்டிருப்பார்கள். அவர்கள் மிகவும் திறமையான பேட்ஸ்மேன்கள். ஆனாலும் அவர்களுக்கு எதிராக நான் சிறப்பாக பந்துவீச வேண்டும் என்று நினைக்கிறேன். அதோடு இதுபோன்ற ஜாம்பவான்களுக்கு எதிராக பந்துவீசும்போது நல்ல அனுபவம் கிடைக்கும்' என்று கூறினார்.