நான் தவறான பந்துகளை வீச விரும்புகிறேன் - ஆட்ட நாயகன் ரவி பிஷ்னோய்
இலங்கைக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் ரவி பிஷ்னோய் ஆட்ட நாயகன் விருது வென்றார்.
பல்லகெலே,
இந்தியா - இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 8 ஓவர்களாக குறைக்கப்பட்டு இந்தியாவின் வெற்றி இலக்கு 78 ரன்கள் ஆக மாற்றியமைக்கப்பட்டது.
அதனால் அதிரடியாக விளையாடிய இந்திய அணி 6.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. ஜெய்ஸ்வால் 30 ரன்களும்,சூர்யகுமார் 26 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 22 ரன்களும் எடுத்தனர்.
இந்தியாவின் இந்த வெற்றிக்கு பந்துவீச்சு துறையில் முக்கிய பங்காற்றிய ரவி பிஷ்னோய் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில் கொஞ்சம் வேகமாக பந்து வீசுவது தமக்கு உதவுவதாக பிஷ்னோய் தெரிவித்துள்ளார். அத்துடன் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக தவறான லைனில் பந்து வீசுவது தமக்கு வேலை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி போட்டியின் முடிவில் அவர் பேசியது பின்வருமாறு:-"இன்று பிட்ச் வித்தியாசமாக இருந்தது. நேற்று முதல் இன்னிங்சில் அது சுழலுக்கு சாதகமாக இல்லை. ஆனால் இன்று பந்து நன்றாக சுழன்றது. என்னுடைய வேகம் எனக்கு நல்லது. நான் வேகத்துடன் பந்து வீச விரும்புகிறேன். சில நேரங்களில் தவறான பந்துகளை வீசுவதை நான் விரும்புகிறேன். அதை வீசி எனக்கு வேலை செய்கிறதா? என்பதை பார்க்க முயற்சிக்கிறேன். இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அது வேலை செய்கிறது. டெத் ஓவர்களில் என்னால் பந்து வீச முடியும் என்று அணி நிர்வாகம் நம்புகிறது. அந்த பொறுப்பை நானும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறினார்.