ரோகித் சர்மாவுக்கு எதிராக நிறைய விளையாடியுள்ளேன்... அதனால் - ஆட்ட நாயகன் டிரெண்ட் போல்ட் பேட்டி

ஐ.பி.எல். தொடரில் நேற்று மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி வீரர் டிரெண்ட் போல்ட் ஆட்ட நாயகன் விருது வென்றார்.;

Update:2024-04-02 04:27 IST

image courtesy: twitter/@IPL

மும்பை,

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 14-வது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் வீழ்த்தியது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவர்களில் 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக டிரெண்ட் போல்ட், சஹால் தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.

பின்னர் 126 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு ரியான் பராக் அரைசதம் அடித்து 15.3 ஓவரிலேயே எளிதான வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். இந்த வெற்றிக்கு சந்தேகமின்றி ரோகித் சர்மா, நமன் திர், பிரேவிஸ் ஆகிய 3 பேட்ஸ்மேன்களை கோல்டன் டக் அவுட்டாக்கி ஆரம்பத்திலேயே மும்பையை மடக்கிய டிரெண்ட் போல்ட் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

இந்நிலையில் கடந்த பல வருடங்களாக ரோகித் சர்மாவை அதிகமாக எதிர்கொண்டுள்ளதால் அவருடைய பலவீனத்தை பற்றி தெரிந்து வைத்துள்ளதாக டிரெண்ட் போல்ட் கூறியுள்ளார். எனவே அதற்கு தகுந்தாற்போல் சிறிய மாற்றத்தை செய்து ரோகித்தை அவுட்டாக்கியதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேட்டியில் பேசியது பின்வருமாறு:-

"புதிய பந்தில் விக்கெட்டுகளை எடுக்கும் என்னுடைய வேலையை பூர்த்தி செய்வது மகிழ்ச்சியை கொடுக்கிறது. டாஸ் வென்ற நாங்கள் ஆரம்பத்திலேயே சில விக்கெட்டுகளை எடுத்து பேட்ஸ்மேன்கள் மீது அழுத்தத்தை போடுவது பற்றி பேசினோம். ரோகித் சர்மாவுக்கு எதிராக நான் நிறைய விளையாடியுள்ளேன்.  அதனால் அவருடைய பலவீனத்தை பற்றி தெரிந்து வைத்துள்ளேன். எனவே நீங்கள் சற்று வித்தியாசமாக செயல்பட்டாலே அவருடைய விக்கெட்டை எடுக்கலாம்.

எப்போதும் இந்த வழி வேலை செய்யாது. ஆனால் அது வேலை செய்யும்போது மகிழ்ச்சியாக இருக்கும். நன்ரே பர்கர் ஒரு நல்ல வீரர். பல தென்னாப்பிரிக்க வீரர்களை போலவே அவரும் சிறப்பாக செயல்படுகிறார். சந்தீப் சர்மா இப்போட்டியில் விளையாட விட்டாலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அஸ்வின் மற்றும் சஹால் ஆகியோரும் அசத்தினார்கள். அவர்களுடன் சேர்ந்து நானும் இந்த பந்து வீச்சு கூட்டணியில் ஒரு அங்கமாக இருப்பது நல்லது" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்