உம்ரான் மாலிக்கின் பந்துவீச்சில் நிறைய நன்மைகளை அடைந்தேன்- அர்ஷ்தீப் சிங்
பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அர்ஷ்தீப் சிங் கூறியுள்ளார்.
வெலிங்டன்,
நியூசிலாந்தில் விளையாடி வரும் இளம் இந்திய அணி முதலில் நடைபெற்ற டி20 தொடரை வென்றாலும் அடுத்ததாக நடைபெறும் ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் 1 -0 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.
இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு துறையில் புது முகங்களாக அர்ஷிதீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் விளையாடி வருகிறார்கள். ஆக்லாந்து நகரில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் ஜோடியாக அறிமுகமான இவர்கள் இடது - வலது கை பவுலர்களாக எதிரணிக்கு சவாலை கொடுப்பவர்களாக உள்ளனர். இந்நிலையில் பழகிய கொஞ்ச நாளிலேயே உம்ரான் மாலிக் தம்முடைய நண்பராக மாறிவிட்டதாக மகிழ்ச்சியுடன் அர்ஷிதீப் சிங் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு:- உம்ரான் மாலிக்குடன் நான் மகிழ்ச்சியாக செயல்படுகிறேன். என்னை போலவே அவரும் அவ்வப்போது நகைச்சுவைகளை செய்வார். பந்து வீச்சை பொறுத்தவரை அவரால் நான் நிறைய நன்மைகளை அடைகிறேன் என்றே சொல்லலாம். ஏனெனில் 155 வேகத்தில் அவரை எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன்கள் அடுத்த ஓவரிலேயே 135 வேகத்தில் எதிர்கொள்ளும் என்னை சந்திக்கும் போது தடுமாறுகிறார்கள்.
அந்த வகையில் களத்திலும் களத்திற்கு வெளியேயும் நாங்கள் இருவரும் மகிழ்ச்சியுடன் செயல்படுகிறோம். இந்த நட்பை தொடர விரும்புகிறோம். ஒருநாள் போட்டிகள் மிகவும் பெரியதாகும். அதில் பேட்டிங் போலவே பந்து வீச்சிலும் பார்ட்னர்ஷிப் போடுவது அவசியமாகும். அதனால் எப்போதுமே என்னுடன் எதிர்புறம் பந்து வீசும் பவுலரை நான் பார்ப்பேன். அவர் சிறப்பாக பந்து வீசும் பட்சத்தில் நான் விக்கெட் எடுப்பதை விட ரன்களை குறைவாக கொடுக்க நினைப்பேன்.
அதை செய்தாலே அழுத்தம் உண்டாகி யாருக்காவது விக்கெட் விழுந்து விடும். ஏனெனில் கிரிக்கெட் என்பது குழு விளையாட்டாகும். எனவே நான் எதிரணியை அட்டாக் செய்தால் என்னுடைய பார்ட்னர் பவுலர் கட்டுப்பாடாகப் பந்து வீசுவார். என்று கூறினார்.