"உம்ரான் மாலிக்கைப் போல் என்னால் வேகமாக பந்துவீச முடியாது ஆனால்..." - ஹர்ஷல் படேல் பேச்சு

வேகமாக பந்துவீசுவது குறித்து நான் கவலைப்பட வேண்டியதில்லை என ஹர்ஷல் படேல் தெரிவித்துள்ளார்.

Update: 2022-06-16 16:57 GMT

Image Courtesy : AFP 

மும்பை,

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்காக 19 விக்கெட்களை கைப்பற்றி அந்த அணியின் வெற்றிகளில் முக்கிய பங்கு வகித்தவர் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல். குறிப்பாக டெத் ஓவர்களில் இவர் வீசும் "ஸ்லோவேர் பந்துகளை" எதிர்கொள்ள பேட்ஸ்மேன்கள் சிரமப்படுகிறார்கள்.

தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 20 ஓவர் தொடரில் இவர் விளையாடி வருகிறார். குறிப்பாக கடந்த போட்டியில் 4 விக்கெட்களை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கினார்.

இந்த நிலையில் அவர் தற்போது தனது பந்துவீச்சு முறை குறித்தும் சக வீரர் உம்ரான் மாலிக் குறித்தும் பேசியுள்ளார். இது குறித்து ஹர்ஷல் கூறியதாவது:

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல்லில் நான் எவ்வாறு பந்து வீசுகிறேன் என்று பலர் கவனிக்கிறார்கள். ஒவ்வொரு பந்து வீச்சாளரின் பலமும், பவுலிங் திறனும் எதிரணியினருக்கு தெரியும். ஒரு பந்துவீச்சாளராக, அவர்களை விட ஒரு படி மேலே இருப்பதே எனது வேலை. ஒரு நாளின் முடிவில் நீங்கள் 15 திட்டங்களை வைத்திருக்கலாம். ஆனால் ஒரு குறிப்பிட்ட நாளில் அழுத்தமான சூழ்நிலையில், நீங்கள் வெளியே சென்று நம்பிக்கையுடன் செயல்படவில்லை என்றால், எல்லாமே தவறாக முடியும்.

உம்ரான் மாலிக்கைப் போல் என்னால் வேகமாக பந்துவீச முடியாது என்பதால் வேகத்தை குறித்து நான் கவலைப்பட வேண்டியதில்லை. சர்வதேச அளவில் திறமையான பந்துவீச்சாளராக என்னை நான் வளர்த்துக் கொள்ள வேண்டும். எல்லா ஆடுகளங்களிலும் பந்துவீசக்கூடிய பந்துவீச்சாளர்கள் அணியில் உள்ளனர். மெதுவான ஆடுகளங்கள் மற்றும் பெரிய மைதானங்களில் பந்துவீசுவதையே நான் எப்போதும் விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்