'நடராஜனை எண்ணி பெருமை கொள்கிறேன்' - சேலத்தில் தினேஷ் கார்த்திக் பேச்சு
சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து உலக கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்தி உள்ளார். என தெரிவித்தார்.
சேலம்,
இந்திய கிரிக்கெட் அணி வீரர் தங்கராசு நடராஜன் தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் 'நடராஜன் கிரிக்கெட் மைதானம்' என்ற பெயரின் கிரிக்கெட் மைதானத்தை நிறுவியுள்ளார். இதன் திறப்பு விழா ஜூன் 23-ந் தேதி (அதாவது இன்று) என அறிவிக்கப்பட்டது.
அதன்படி, நடராஜன் கிரிக்கெட் அகாடமி சார்பில் நடராஜன் கிரிக்கெட் மைதானத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் இன்று திறந்து வைத்தார். அவருடைய தாய், தந்தை முன்னிலையில் மைதானம் திறக்கப்பட்டது. இந்த மைதானம் திறப்பு நிகழ்ச்சியில் கிரிக்கெட் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி, விஜயசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
அதேபோல நடிகர் யோகிபாபு, நடிகர் புகழ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அது மட்டுமின்றி தமிழ்நாடு கிரிக்கெட் வாரிய தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சி.எஸ்.கே. சிஇஓ விஸ்வநாதன் மற்றும் திருச்சி கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்த விழாவில் பங்கேற்றனர்.
இந்த மைதானத்தில் 4 பிட்சுகள், இரண்டு பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய வகையில் இடமும் அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கும் தமிழ்நாடு பிரீமியர் லீக்கில் (டி.என்.பி.எல்) நடராஜன் திருச்சி அணியில் விளையாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நிகழ்ச்சியில் பேசிய தினேஷ் கார்த்திக் கூறுகையில் ,
"நான் இங்கு வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. நடராஜன் சுவாரஸ்யமான மனிதர். அவரது பயணம் பலருக்கும் உத்வேகம் கொடுக்கும்.
விளையாட்டு வீரர்களின் ஆரம்ப நிலை பயணங்களில் பலரும் உதவி செய்வார்கள். ஆனால், ஒரு நிலைக்கு வந்ததும் மறக்க நேரும். ஆனால், நடராஜன் அப்படி இல்லை. அவருக்கு உதவிய அனைவரையும் தன் நினைவில் வைத்துக் கொண்டுள்ளார். தான் சார்ந்துள்ள கிரிக்கெட்டுக்கு ஒரு மைதானம் கட்டியுள்ளது பெரிய விஷயம் .
சின்ன ஊர்களில் இருந்து வந்து பெரிய விஷயம் சாதிக்க முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் தோனி தான். அது போல சேலம் சின்னப்பம்பட்டியில் இருந்து உலக கிரிக்கெட்டில் பெரிய தாக்கத்தை அவர் ஏற்படுத்தி உள்ளார். என தெரிவித்தார்.