நான் சூர்யகுமார் யாதவின் ரசிகன் - டி வில்லியர்ஸ்
20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதால் வீரர்கள் சோர்வு அடைவார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.;
கேப்டவுன்,
நவீன கிரிக்கெட்டில் ஹீரோவாக உருவெடுத்த தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான ஏபி டி வில்லியர்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக அரை சதம், சதம் மற்றும் 150 ரன்களை அடித்த வீரர் என்ற 3 உலக சாதனைகளுக்கு சொந்தக்காரர். எதிரணி பந்து வீச்சாளர்கள் எப்படி பந்து வீசினாலும் அதை உருண்டு புரண்டு மைதானத்தின் அனைத்து திசைகளிலும் பவுண்டரிகளும் சிக்சர்களுமாக பறக்க விட்டு கற்பனை செய்ய முடியாத புதுப்புது ஷாட்டுகளை அறிமுகப்படுத்தினார்.
இந்நிலையில் டி வில்லியர்ஸ் நேற்று அளித்த ஒரு பேட்டியில், தான் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவின் ரசிகன் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், '20 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் கவனிக்கத்தக்க வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். இருப்பினும் நான் சூர்யகுமார் யாதவின் பேட்டிங்கை பார்த்து ரசிக்க விரும்புகிறேன். நான் அவருடைய பெரிய ரசிகன்.
அவருக்கு இந்த உலகக்கோப்பை போட்டித்தொடர் சிறப்பானதாக அமையும் என்று நம்புகிறேன். ஆனால் 20 ஓவர் உலகக்கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக இந்தியாவை கருதுகிறேன். உலகக்கோப்பை போட்டிகளில் நெருங்கி வந்து கோட்டை விடும் இந்திய அணி இந்த முறை கோப்பையை வெல்லும் என்று நினைக்கிறேன்.
பல ஆண்டுகளாக நடந்து வரும் ஐ.பி.எல். போட்டி இந்திய கிரிக்கெட்டை மேலும் வலுப்படுத்தி இருக்கிறது. 20 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கு முன்னதாக ஐ.பி.எல். போட்டி நடைபெறுவதால் வீரர்கள் சோர்வு அடைவார்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. இரண்டுமே 20 ஓவர் போட்டிதான். பவுலர்கள் ஒருநாளில் 4 ஓவர்கள் தான் பந்து வீசுவார்கள்.
மேலும் இரண்டு அணிகள்தான் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். எனவே மற்ற அணிகளின் வீரர்கள் போதுமான ஓய்வுடன் உலகக்கோப்பை போட்டிக்கு செல்ல முடியும். வீரர்களால் தங்களது பணிச்சுமையை நிர்வகிக்க முடியும் என்று நினைக்கிறேன். கிரிக்கெட்டின் உச்ச வடிவான டெஸ்ட் போட்டியில் இளம் வீரர்கள் அனைவரும் விளையாட வேண்டும்' என்று கூறினார்.