கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்ற ஐதராபாத்...துள்ளிக்குதித்து கொண்டாடிய காவ்யா மாறன் - வைரலாகும் வீடியோ

ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ராஜஸ்தான் அணியை வீழ்த்தி ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.

Update: 2024-05-03 07:50 GMT

Image Courtesy: X (Twitter)

ஐதராபாத்,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற 50வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய ஐதராபாத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் குவித்தது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 76 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டை இழந்து 200 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ராஜஸ்தான் தரப்பில் அதிகபட்சமாக ரியான் பராக் 77 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தில் புவனேஷ்வர் குமாருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் ராஜஸ்தானின் வெற்றிக்கு கடைசி பந்தில் 2 ரன்கள் தேவைப்பட்ட போது புவனேஷ்வர் குமார் வீசிய அந்த பந்தில் ரோவ்மன் பவல் எல்பிடபிள்யூ  முறையில் அவுட் ஆனார். இதன் மூலம் 1 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் ஐதராபாத் வெற்றி பெற்ற உடன் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து வெற்றியை கொண்டாடினார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.



Tags:    

மேலும் செய்திகள்