ரிஷப் பண்ட் விளையாடியதை அவர் பார்த்திருக்க மாட்டார் - இங்கிலாந்து வீரருக்கு ரோகித் பதிலடி

தங்களுடைய அணுகு முறையை பார்த்துதான் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாக இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் கூறியிருந்தார்.

Update: 2024-03-06 11:43 GMT

தர்மசாலா,

இங்கிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவடைந்த நிலையில் 3-1 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை கைப்பற்றி உள்ளது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கும் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நாளை தர்மசாலாவில் நடைபெற உள்ளது.

முன்னதாக இந்த தொடரில் இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால் 4 போட்டிகளில் 655 ரன்கள் விளாசி இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 2-வது போட்டியில்  209 ரன்கள் விளாசிய அவர் 3-வது போட்டியில் 12 சிக்சர்களுடன் 214 ரன்கள் குவித்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

அதன் வாயிலாக இங்கிலாந்துக்கு எதிராக 2 இரட்டை சதங்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும் இங்கிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் அதிக ரன்கள் (655 ரன்கள்) அடித்த இந்திய பேட்ஸ்மேன் என்ற விராட் கோலியின் சாதனையையும் சமன் செய்தார்.

அப்போது தங்களுடைய 'பேஸ்பால்' அணுகு முறையை பார்த்துதான் ஜெய்ஸ்வால் அதிரடியாக விளையாடுவதாக தெரிவித்த இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதற்கான பாராட்டுகள் தங்களையே சேரும் என்று கூறியிருந்தார். அதற்கு ஏற்கனவே நாசர் உசேன், மைக்கேல் கிளார்க், கிறிஸ் கெயில் போன்ற நிறைய முன்னாள் வீரர்கள் தக்க பதிலடி கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் ஒருவேளை டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடியாக விளையாடக் கூடிய ரிஷப் பண்ட் ஆட்டத்தை பென் டக்கெட் பார்த்திருக்க மாட்டார் என்று இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார். அதனாலயே பென் டக்கெட் இப்படி பேசியிருக்கலாம் என்று கலாய்க்கும் வகையில் பதிலடி கொடுத்த ரோகித் சர்மா இது பற்றி செய்தியாளர்களிடம் கூறியது பின்வருமாறு:-

"எங்களுடைய அணியில் ரிசப் பண்ட் எனும் வீரர் இருக்கிறார். அவர் விளையாடியதை பென் டக்கெட் பார்த்திருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். பேஸ்பால் என்றால் என்ன என்பது எனக்கு தெரியாது. இத்தொடரில் இங்கிலாந்து வீரர்கள் காட்டுத்தனமாக பேட்டை சுற்றியதையும் நான் பார்க்கவில்லை. கடந்த தொடரை விட இம்முறை அவர்கள் சிறந்த கிரிக்கெட்டையே விளையாடினார்கள். ஆனாலும் பேஸ்பால் என்பதன் அர்த்தம் இன்னும் எனக்கு தெரியவில்லை" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்