50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிக்கப்போவது இவர்தான் – ஜாக் காலிஸ் கருத்து
இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தான் 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவிப்பார் என்று தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஜாக் காலிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.
கேப்டவுன்,
10 அணிகள் பங்கேற்கும் 13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்) இந்தியாவின் 10 நகரங்களில் அக்டோபர் 5-ந்தேதி முதல் நவம்பர் 19-ந்தேதி வரை நடக்கிறது. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த உலகக்கோப்பை தொடருக்கான அனைத்து அணிகளும் தற்போது தீவிரமாக தயாராகி வரும் வேளையில் ஒவ்வொரு அணியுமே தங்களது அணியின் வீரர்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்தி வருகிறது.
அதற்கு முன்னதாக தற்போதே இந்த உலகக் கோப்பை தொடரில் எந்தெந்த வீரர்கள் அதிக ரன்கள் குவிப்பார்கள்? என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரான ஜாக் காலிஸ் இந்த உலகக் கோப்பை தொடரில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் பேட்ஸ்மேன் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்;- இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் தான் இந்த தொடரில் அதிக ரன்களை குவிப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் இந்திய மைதானங்களில் அவர் எப்பொழுதுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதேபோன்று, இங்கிலாந்து அணியின் கேப்டனாக இருக்கும் அவருக்கு நல்ல நம்பிக்கை இருக்கிறது. 2019 ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அந்த அணியை மீண்டும் அவர் சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் செல்ல முனைவார். எனவே அவரது ஆட்டம் இந்த தொடரில் அற்புதமாக இருக்கும் என்று கருதுவதாக கூறியுள்ளார்.
இங்கிலாந்து அணியின் அதிரடி ஆட்டக்காரரான ஜாஸ் பட்லர் இதுவரை 165 ஒருநாள் போட்டியில் விளையாடி 4647 ரன்களை குவித்துள்ளார். இதில் 11 சதங்களும், 24 அரைசதங்களும் அடங்கும்.