அவரை மீண்டும் ஆர்.சி.பி. அணியின் கேப்டனாக்குங்கள்...அப்படி செய்தால் மட்டுமே...- ஹர்பஜன் சிங்
நடப்பு ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணி மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் 17-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த 10 அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மோசமான செயல்பாடுகளை வெளிப்படுத்தி தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் 5 தோல்வி, ஒரு வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இனிவரும் அனைத்து போட்டிகளிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.
இந்நிலையில் பாப் டு பிளஸ்சிஸ் தலைமையில் பெங்களூரு அணி கொஞ்சம் கூட போராடாமல் தோல்விகளை சந்தித்து வருவதாக இந்திய முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். எனவே அவருக்கு பதிலாக மீண்டும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று ஹர்பஜன் அதிரடியான கோரிக்கையை வைத்துள்ளார். ஏனெனில் இதற்கு முன் கோப்பையை வெல்லாவிட்டாலும் விராட் கோலி தலைமையில் பெங்களூரு அணி வெற்றிக்கு முழு மூச்சுடன் போராடியதாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார்.
எனவே மீண்டும் விராட் கோலி கேப்டனாக வந்தால் பெங்களூரு அணி வெற்றி பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்த அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:- "நான் விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள் என்று சொல்வேன். அதை செய்தால் குறைந்தபட்சம் அவர்களுடைய அணியில் வெற்றிக்கான போராட்டம் இருக்கும். விராட் கோலி தன்னுடைய வீரர்களை வெற்றிக்கு கடுமையாக போராட வைப்பார்.
பாப் டு பிளஸ்சிசும் அதனை செய்ய வேண்டும். அவரால் சில வீரர்கள் வெளியே அமர்ந்திருக்கின்றனர். ஒவ்வொரு வருடமும் சதமடிக்கும் ஒரு வீரர் வெளியே அமர்ந்திருக்கிறார். டு பிளஸ்சிஸ் கேப்டனாக இருப்பதால் விராட் கோலி எதுவும் செய்ய முடியாமல் உட்கார்ந்திருக்கிறார். எனவே விராட் கோலியை கேப்டனாக நியமியுங்கள். அவருடைய தலைமையில் இந்த அணி போராடி பின்னர் வெல்லும்" என்று கூறினார்.