விராட், ரோகித் இவ்வளவு தூரம் வளர்வதற்கு அவர்தான் காரணம் - ஷர்துல் தாகூர்

விராட், ரோகித் போன்றவர்கள் கூட ஆரம்ப காலத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்கள் என்று ஷர்துல் தாகூர் கூறியுள்ளார்.

Update: 2024-08-06 08:36 GMT

மும்பை,

இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவராக போற்றப்படுபவர் எம்.எஸ்.தோனி. இவரது தலைமையிலான இந்திய அணி ஐசிசி டி20, 50 ஓவர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய 3 உலகக்கோப்பைகளை வென்றுள்ளது. அதனால் 3 விதமான ஐசிசி வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளை வென்ற ஒரே கேப்டன் என்ற மகத்தான சாதனை படைத்த தோனி சிறந்த பினிஷராகவும் போற்றப்படுகிறார்.

மேலும் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற தற்போதைய நட்சத்திர வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வளர்த்த பெருமைக்குரியவர். அந்த வகையில் மகத்தான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் சாதனை படைத்துள்ள அவர் பலருக்கு ரோல் மாடலாக திகழ்கிறார்.

இந்நிலையில் விராட் கோலி, ரோகித், தாம் போன்ற பல இந்திய வீரர்கள் வளர்வதற்கு தோனி முக்கிய காரணமாக இருந்ததாக ஷர்துல் தாகூர் தெரிவித்துள்ளார். இது குறித்து சமீபத்திய நிகழ்ச்சியில் அவர் பேசியது பின்வருமாறு:- "தோனியுடன் விளையாடுவது எப்போதுமே சிறப்பானது. ஏனெனில் அவர் உங்களை வளர அனுமதிப்பார். அவர் எப்பொழுதும் எங்களை சொந்த திட்டத்துடன் விளையாட அனுமதிப்பார். அவர் எப்போதும் எங்களுக்கு திட்டங்களை வகுத்து கொடுக்க மாட்டார்.

குறிப்பாக 'நாளை நான் விக்கெட் கீப்பராக இருக்க மாட்டேன். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? எனவே உங்கள் அறைக்கு சென்று உங்களுடைய விளையாட்டை சிந்தித்து திட்டத்துடன் வாருங்கள். அது வேலை செய்யவில்லையென்றால் நான் உதவி செய்கிறேன்' என்று தோனி எங்களிடம் சொல்வார்.

3 ஐசிசி கோப்பைகளை வென்ற அவர் பல இளம் வீரர்களை வளர்த்து தனது மரபை விட்டு சென்றுள்ளார். தற்போதைய மகத்தான வீரர்களான விராட், ரோகித் போன்றவர்கள் கூட ஆரம்ப காலத்தில் அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் மகத்தான எம்.எஸ். தோனி அவர்களை ஆதரித்தார். அந்த ஆதரவுடன் அவர்கள் 2012-க்குப்பின் இப்போது வரை அசத்தி வருகிறார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்