பாபர் ஆசம் உலகத்தரம் வாய்ந்த வீரர், ஆனால் அவரும் ஒரு மனிதன் தான்- சதாப் கான்
பாபர் ஆசம் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று சதாப் கான் தெரிவித்துள்ளார்.;
பிரிஸ்மேன்,
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருக்கும் அணிகளில் ஒன்றாக பாகிஸ்தான் கருதப்பட்டது. தற்போது, அரையிறுதிக்கு முன்னேறுமா? என்ற நிலை அந்த அணிக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கு அந்த அணியின் கேப்டன் பாபர் ஆசமின் ஃபார்ம் முக்கிய காரணம்.
மூன்று போட்டிகளில் விளையாடி முறையே 0, 4 மற்றும் 4 ரன்களே அடித்துள்ளார். இதனால் அவரது ஆட்டம் குறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். பாகிஸ்தான் அணியின் மிடில் ஆர்டர் வரிசை பலவீனமாக இருப்பதால், அவர் தொடக்க வீரராக களம் இறங்குவதற்குப் பதிலாக மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் எங்கள் கேப்டன் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம் என்று பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சதாப் கான் தெரிவித்துள்ளார். பாபர் ஆசம் குறித்து சதாப் கான் கூறுகையில் ''பாபர் ஆசம் உலகத்தரம் வாய்ந்த வீரர். இதில் யாருக்கும் சந்தேகம் இருக்க முடியாது.
ஆனால், அவரும் ஒரு மனிதன்தான். சில நேரங்களில் அவர் தவறு செய்யலாம். இருந்தாலும், அவர் எங்களுடைய கேப்டன். அவர் எங்களுடைய சிறந்த கேப்டன். அவர் எங்களுக்கு ஆதராவாக உள்ளார். இதனால், தற்போது அவருக்கு நாங்கள் ஆதரவாக உள்ளோம். மூன்று போட்டிகளில் சிறப்பாக விளையாடாததால் அவர் ஃபார்ம் குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம்.
அவர் ஃபார்ம்-க்கு வருவதற்கு ஒரு சிறந்த இன்னிங்ஸ் மட்டுமே தேவை. எங்களுக்கு அடுத்த போட்டி மிகப்பெரியது. ஆகவே, பாபர் ஆசம் அடுத்த போட்டியில் ரன்கள் குவிப்பார் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார். பாகிஸ்தான் அணி தனது அடுத்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை நாளை எதிர்கொள்கிறது.