என்னையும் சச்சினையும் விட அவர்தான் சிறந்த பேட்ஸ்மேன் - பிரையன் லாரா பாராட்டு
சச்சின் மற்றும் தன்னை விட கார்ல் கூப்பர் சிறந்த பேட்ஸ்மேன் என்று பிரையன் லாரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
டிரினிடாட்,
கிரிக்கெட்டின் இருபெரும் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களாக போற்றப்படுவர்கள் இந்தியாவை சேர்ந்த சச்சின் மற்றும் வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா ஆவர். அதில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் மற்றும் 100 சதங்கள் அடித்துள்ள சச்சின் டெண்டுல்கர் பல உலக சாதனைகளுடன் இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஜாம்பவான் வீரராக போற்றப்படுகிறார்.
அதேபோல பிரையன் லாரா 20 வருடங்களுக்கு முன்பாக 400 ரன்கள் அடித்த அவருடைய அதிகபட்ச டெஸ்ட் ஸ்கோர் உலக சாதனை இன்னும் உடைக்கப்படாமல் இருக்கிறது. அந்த வகையில் எத்தனை பேட்ஸ்மேன்கள் வந்தாலும் சச்சின் மற்றும் லாராவுக்கு நிகராக முடியாது என்பதே பெரும்பாலான வல்லுனர்களின் கருத்தாகும்.
இந்நிலையில் சச்சின் மற்றும் தன்னை விட வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் கார்ல் கூப்பர் சிறந்த பேட்ஸ்மேன் என்று பிரையன் லாரா பாராட்டு தெரிவித்துள்ளார். இது பற்றி தனது புத்தகத்தில் அவர் எழுதியுள்ளது பின்வருமாறு:-
"கார்ல் நான் பார்த்த வீரர்களில் சிறந்தவர். சொல்லப்போனால் நானும் சச்சின் டெண்டுல்கர் கூட அவருடைய திறமையை நெருங்க முடியாது என்று சொல்வேன். கேப்டனாக இல்லாமல் அவருடைய புள்ளி விவரங்களை பார்த்தால் அது வித்தியாசமானதாக இருக்கும். கேப்டனாகவும் கூட பொறுப்புடன் விளையாடிய அவருடைய சராசரி கிட்டத்தட்ட 50 தொடும். இருப்பினும் ஒரு கேப்டனாக மட்டுமே அவர் தனது உண்மையான திறனை நிறைவேற்றினார் என்பது வருத்தமளிக்கிறது.
லார்ட்ஸ் போட்டியில் கார்ல் கூப்பரின் பேட்டிங்கை நான் பார்த்துள்ளேன். அவர் என்ன ஒரு அற்புதமான பிளேயர். அப்போட்டியில் அவர் சீனியர்களை விட அற்புதமாக பேட்டிங் செய்தார். கார்ல் பேட்டிங் செய்யும்போது அதை தேஷ்மண்ட், விவியன் ரிச்சர்ட்ஸ், கோர்டான் க்ரீனிட்ஜ் ஆகியோர் தங்களின் வேலையை விட்டுவிட்டு பார்ப்பார்கள். அந்த வகையில் மிகவும் திறமையான அவர் நாம் எந்தளவுக்கு சிறந்தவர் என்பதை புரிந்து கொள்ளவில்லை"என்று கூறியுள்ளார்.