அவரிடம் எல்லா திறமையும் இருக்கிறது - ரஜத் படிதாருக்கு விராட் கோலி ஆதரவு
பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார்.;

image courtesy:twitter/@RCBTweets
பெங்களூரு,
இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டி20 தொடரான ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.
இதில் கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
இந்த தொடருக்கான பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக ரஜத் படிதார் நியமிக்கப்பட்டுள்ளார். 17 சீசன்களாக கோப்பையை வெல்லாத அந்த அணியின் கோப்பை ஏக்கத்தை இந்த சீசனில் புதிய கேப்டன் ரஜத் படிதார் தீர்த்து வைப்பார் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த தொடருக்கு முன்னதாக ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் 'ஆர்சிபி அன்பாக்ஸ்' என்ற சிறப்பு நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு அணியின் வீரர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.
அந்த நிகழ்ச்சியில் பெங்களூரு அணியின் புதிய கேப்டனை அறிமுகம் செய்து வைத்த விராட் கோலி, படிதாரிடம் வெற்றிக்கான அனைத்து திறமைகளும் இருப்பதாக ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "இந்த பையன் (ரஜத் படிதார்) பெங்களூரு அணியை நீண்ட காலம் வழி நடத்தப் போகிறார். சிறந்த திறமையைக் கொண்ட அவர் சிறப்பான வீரர் என்பதை அனைவரும் அறிவோம். நல்ல பணிவையும் கொண்டுள்ள அவர் இந்த அற்புதமான அணியை சிறப்பாக முன்னோக்கி அழைத்துச் செல்வார். அவரிடம் வெற்றிக்கான அனைத்து திறமைகளும் உள்ளன. நமது அணியில் நிறைய திறமையான வீரர்கள் இருக்கிறார்கள்.
இத்தனை வருடங்களாக பெங்களூரு அணியில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த அணியில் இருப்பதை மிகவும் விரும்புகிறேன்.ஒவ்வொரு சீசனைப் போலவே இந்த வருடமும் மகிழ்ச்சியுடன் விளையாட உள்ளேன். இந்த அணியில் 18 வருடங்களாக இருக்கிறேன். அதை மிகவும் விரும்புகிறேன்" என்று கூறினார்.