முதல் டி20 போட்டி ரத்து; தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் மீது சுனில் கவாஸ்கர் அதிருப்தி..!

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற இருந்தது.

Update: 2023-12-11 01:49 GMT

மும்பை,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் நேற்று நடைபெற இருந்தது.

இந்த நிலையில், டர்பனில் தொடர்ந்து மழைபெய்ததால் இந்த போட்டி டாஸ் கூட போடப்படாமல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த போட்டி ரத்து செய்யப்பட்டதற்கு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மீது இந்திய முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளார்.

அதாவது ஆரம்பத்தில் வந்த மழை சற்று நேரத்திற்குப் பின் நின்று விட்டது. அப்போது உடனடியாக போட்டியை துவக்க முடியாத அளவுக்கு வெளிப்புற களங்கள் (தார்ப்பாய் கொண்டு மூடாமல் இருந்ததால்) ஈரமாக இருந்தன .

அதை மைதான பராமரிப்பாளர்கள் உலர்த்திக் கொண்டிருந்த நேரத்தில் மீண்டும் மழை வந்ததால் போட்டியை ரத்து செய்வதாக நடுவர்கள் அறிவித்தனர். அந்த வகையில் மைதானத்தை முழுவதுமாக தார்ப்பாய் கொண்டு மூடாத தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் மீது அதிருப்தியை வெளிப்படுத்திய கவாஸ்கர் கூறியதாவது,

மைதானம் முழுவதுமாக மூடப்படாததால் மழை நின்றாலும் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு போட்டியை துவங்க முடியாத நிலை உள்ளது.  உலகின் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் நிறைய பணத்தை வைத்துள்ளன. எனவே இது போன்ற தவறை செய்யாதீர்கள். உண்மையாக அனைத்து கிரிக்கெட் வாரியங்களிடமும் நிறைய பணம் இருக்கிறது. பிசிசிஐ அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லாமல் இருக்கலாம்.

ஆனால் ஒரு மைதானத்தை மொத்தமாக தார்ப்பாய் கொண்டு மூடும் அளவுக்கு அவர்களிடம் பணம் இருக்கும். 2019 உலகக்கோப்பையில் இங்கிலாந்தின் மைதானங்கள் முழுவதுமாக மூடப்படாததால் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. குறிப்பாக தென் ஆப்பிரிக்கா விளையாட விரும்பிய ஒரு போட்டி மழையால் நிறுத்தப்பட்டது. ஒருமுறை கொல்கத்தாவில் இதேபோல மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. ஆனால் அடுத்த போட்டியிலேயே மொத்த மைதானத்தையும் கவர் செய்யும் அளவுக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டன.

குறிப்பாக யாருமே ஈடன் கார்டன்ஸ் மைதானத்தை குறை சொல்ல முடியாத அளவுக்கு சவுரவ் கங்குலி உடனடியாக அங்கு வசதிகளை ஏற்படுத்தினார். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்