கேமரூன் கிரீன், மேத்யூ வேட் அதிரடி: ஆஸ்திரேலிய அணி அதிரடி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா 209 ரன்கள் இலக்கை விரட்டிப்பிடித்து வெற்றி பெற்றது.;

Update:2022-09-20 22:41 IST

மொகாலி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் ஆடுகிறது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் நேற்றிரவு அரங்கேறியது. இந்திய அணியில் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்டுக்கு பதிலாக தினேஷ் கார்த்திக்குக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டார். ஆஸ்திரேலிய அணியில் புதுமுக வீரராக டிம் டேவிட் இடம் பிடித்தார்.

'டாஸ்' ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் பிஞ்ச் முதலில் இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தார். இதையடுத்து கேப்டன் ரோகித் சர்மாவும், லோகேஷ் ராகுலும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் ஜொலிக்க தவறிய ரோகித் சர்மா (11 ரன்) ஹேசில்வுட்டின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதே போல் அடுத்து வந்த விராட் கோலி 2 ரன்னில் கேட்ச்சாகி ஏமாற்றம் அளித்தார்.

ராகுல், பாண்ட்யா அரைசதம்

இதன் பின்னர் லோகேஷ் ராகுலும், சூர்யகுமார் யாதவும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன், ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு ஓடவிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினர். 11.4 ஓவர்களில் இந்தியா 100 ரன்களை தொட்டது.

அணியின் ஸ்கோர் 103-ஆக உயர்ந்த போது, லோகேஷ் ராகுல் 55 ரன்களில் (35 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டமிழந்தார். தனது 18-வது அரைசதத்தை எட்டிய ராகுல், 20 ஓவர் போட்டியில் 2 ஆயிரம் ரன்களையும் கடந்து அசத்தினார். மறுமுனையில் ஆடம் ஜம்பாவின் சுழலில் அடுத்தடுத்து 2 சிக்சர் பறக்க விட்ட சூர்யகுமார் யாதவ் 46 ரன்களில் (25 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் சிக்கினார்.

இதன் பின்னர் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா அதிரடி காட்டினார். கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை நொறுக்கியெடுத்து ருத்ரதாண்டவமாடிய அவர் கடைசி 3 பந்துகளை தொடர்ச்சியாக சிக்சருக்கு தெறிக்கவிட்டு 200 ரன்களை தாண்ட வைத்தார். இதற்கிடையே, அக்‌ஷர் பட்டேல், தினேஷ் கார்த்திக் தலா 6 ரன்னில் நடையை கட்டினர்.

20 ஓவர் முடிவில் இந்தியா 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியாவின் சிறந்த ஸ்கோர் இதுவாகும். சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்த ஹர்திக் பாண்ட்யா 71 ரன்களுடனும் (30 பந்து, 7 பவுண்டரி, 5 சிக்சர்), ஹர்ஷல் பட்டேல் 7 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் எலிஸ் 3 விக்கெட்டும், ஹேசில்வுட் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

கேமரூன் கிரீன் மிரட்டல்

அடுத்து மெகா இலக்கை நோக்கி ஆடிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பதிலடி கொடுத்தனர். கேப்டன் ஆரோன் பிஞ்ச் சிக்சருடன் இன்னிங்சை அட்டகாசமாக தொடங்கி வைத்தார். மற்றொரு தொடக்க வீரர் கேமரூன் கிரீன், உமேஷ் யாதவின் ஒரே ஓவரில் 4 பவுண்டரி விரட்டி மிரட்டினார். தனது பங்குக்கு 22 ரன்கள் எடுத்த பிஞ்ச், அக்‌ஷர் பட்டேலின் பந்துவீச்சில் கிளீன் போல்டு ஆனார். 2-வது விக்கெட்டுக்கு நுழைந்த ஸ்டீவன் சுமித்தும் மட்டையை சுழட்ட, ரன்ரேட் 10 ரன்களுக்கு மேலாக எகிறியது. அந்த அணி 9.2 ஓவர்களில் 100 ரன்களை அடைந்தது. இரண்டு முறை கண்டம் தப்பிய கேமரூன் கிரீன் 61 ரன்கள் (30 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசினார். தொடர்ந்து சுமித் 35 ரன்களிலும், மேக்ஸ்வெல் ஒரு ரன்னிலும், ஜோஷ் இங்லிஸ் 17 ரன்னிலும் வெளியேறினர்.

கடைசி 4 ஓவர்களில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 55 ரன்கள் தேவைப்பட்டது. இந்தியாவுக்கும் ஓரளவு நம்பிக்கை தென்பட்டது. ஆனால் மேத்யூ வேட்டும், டிம் டேவிட்டும் கூட்டணி போட்டு இந்தியாவின் நம்பிக்கையை சிதைத்தனர். 18-வது ஓவரில் ஹர்ஷல் பட்டேலின் பந்து வீச்சில் 3 சிக்சர் உள்பட 22 ரன் திரட்டி, ஆட்டத்தை தங்கள் பக்கம் முழுமையாக திருப்பினர். வெற்றியை நெருங்கிய சமயத்தில் டிம் டேவிட் (18 ரன்) வீழ்ந்தார்.

ஆஸ்திரேலியா வெற்றி

ஆஸ்திரேலிய அணி 19.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 211 ரன்கள் குவித்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேத்யூ வேட் 45 ரன்களுடனும் (21 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), கம்மின்ஸ் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.இந்திய தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 3 விக்கெட்டும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டும் சாய்த்தனர். புவனேஷ்வர்குமார் 4 ஓவர்களில் 52 ரன்களை வாரி வழங்கியது பின்னடைவாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது 20 ஓவர் போட்டி வருகிற 23-ந்தேதி நாக்பூரில் நடக்கிறது.

20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக சிக்சர்: கப்திலின் சாதனையை சமன் செய்தார் ரோகித்

இந்த ஆட்டத்தில் இந்திய கேப்டன் ரோகித் சர்மா ஒரு சிக்சருடன் 11 ரன் எடுத்தார். இந்த சிக்சரையும் சேர்த்து 20 ஓவர் கிரிக்கெட்டில் அவரது சிக்சர் எண்ணிக்கை 172 ஆக உயர்ந்தது. இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் அரங்கில் அதிக சிக்சர் அடித்தவர்களின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்தின் மார்ட்டின் கப்திலின் (172 சிக்சர்) சாதனையை சமன் செய்தார்.

பீல்டிங் சொதப்பல்

இந்தியாவின் தோல்விக்கு மோசமான பீல்டிங்கே முக்கிய காரணமாகும். கேமரூன் கிரீனுக்கு 42 ரன்னில் அக்‌ஷர் பட்டேலும், ஸ்டீன் சுமித்துக்கு 19 ரன்னில் லோகேஷ் ராகுலும் எளிதான கேட்ச் வாய்ப்பை வீணடித்தனர். முன்னதாக கேமரூன் கிரீன் 17 ரன்னில் இருந்த போது யுஸ்வேந்திர சாஹலின் பந்து வீச்சில் 'ஸ்வீப் ஷாட்' அடிக்க முயற்சித்த போது பந்து காலுறையில் பட்டது. பந்து காலுறையில் படாமல் இருந்திருந்தால் லெக் ஸ்டம்பை தாக்கியிருக்கும் என்பது ரீப்ளேயில் தெரிந்தது. ஆனால் இந்திய கேப்டன் ரோகித் சர்மா டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்ய தவறியதால் விக்கெட் வாய்ப்பு பறிபோனது. இதே போல் மேத்யூ வேட்டுக்கு 23 ரன்னில், ஹர்ஷல் பட்டேல் சற்று கடின கேட்ச்சை கோட்டை விட்டார்.

யுவராஜ் சிங்குக்கு கவுரவம்

மொகாலியில் நடந்த 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை இந்திய முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங் கண்டுகளித்தார். சிறிது நேரம் விராட் கோலியுடன் உரையாடினார். பின்னர் 40 வயதான யுவராஜ்சிங் கூறுகையில், 'மொகாலி ஸ்டேடியத்திற்கு மீண்டும் வருகை தந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அடையாளம் பொறிக்கப்பட்ட மேல் சட்டையை (பிளேஸர்) அணிந்து எனது சொந்த மைதானத்திற்கு முதல்முறையாக வருகை தந்துள்ளேன். பஞ்சாப் கிரிக்கெட் சங்கம் என்னை அழைத்து இது மாதிரி அங்கீகரித்து இருப்பது அற்புதமான விஷயம். இதே போல் முன்னாள் முதல்தர போட்டி வீரர்களையும் அழைத்து கவுரவிக்க வேண்டும்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்