டி20 உலகக் கோப்பை: நமிபியா, ஸ்காட்லாந்து அணிகளின் வெற்றியால் இந்திய அணிக்கு கடும் சவால்?- முழு விவரம்
நமிபியாவின் வெற்றியால் 'சூப்பர் 12'-ல் இந்திய அணி இடம்பெற்றுள்ள குரூப்பில் வலுவான அணிகள் ஒன்று சேரும் நிலை ஏற்பட்டு இருந்தது.
ஹோபர்ட்,
8-வது டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. 'சூப்பர் 12' சுற்றுக்கு ஏற்கனவே 8 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதம் 4 அணிகளை தேர்வு செய்வதற்கான முதல் சுற்று போட்டிகள் தற்போது நடைபெறுகின்றன.
தற்போது முதல் சுற்று போட்டியில் குரூப் 'ஏ' வில் நமிபியா, நெதர்லாந்து, இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன. பி' பிரிவில் வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. முதல் சுற்று போட்டியின் முடிவில் குரூப் 'ஏ' பிரிவில் 2-வது இடம் பிடிக்கும் அணியும். குரூப் 'பி' பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியும் இந்திய அணியின் குரூப்பில் சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும்.
உலக கோப்பை தொடர் தொடங்குவதறகு முன் ஏ பிரிவில் இலங்கை முதலிடமும், நமிபியா 2-வது இடமும் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று நமிபியா அணி வெற்றி பெற்றுள்ளதால் மீதம் உள்ள 2 போட்டிகளிலும் இலங்கை அணி அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். இல்லையெனில் நமிபியா அணி முதலிடம் பிடிக்கும். இதனால் இலங்கை 'ஏ' பிரிவில் 2-வது இடம் பிடித்து இந்திய அணியின் குரூப்பில் சேரும்.
நமிபியாவுடன் தோல்வியை தழுவியதால் இலங்கையை குறைத்து மதிப்பிடக் கூடாது. கடந்த ஆசிய கோப்பையில் கூட இலங்கை அணி முதல் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தானிடம் தோற்ற பிறகு, எஞ்சிய அனைத்து போட்டியிலும் வென்று ஆசிய கோப்பையை வென்றது. இதனால், பலமான இலங்கை அணி, இந்தியாவுடன் இடம்பெறும் வகையில் குரூப் அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இன்று மீண்டும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ஸ்காட்லாந்து அணியிடம் முன்னாள் சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வி அடைந்துள்ளது. முதல் சுற்றில் பி பிரிவில் முதல் இடம் பிடிக்கும் அணியுடன் இந்தியா மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணி பி பிரிவில் முதலிடம் பிடித்து இந்திய அணியின் குரூப்பில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது அதற்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி மீதமுள்ள 2 போட்டிகளிலும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் மட்டுமே பி பிரிவில் முதலிடம் பிடித்து இந்திய அணியின் குரூப்பில் இடம்பெறும். நமிபியாவின் நேற்றைய வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் குரூப்பில் பலம் வாய்ந்த பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஒன்று சேரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஒரே நாளில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் இடம் இந்த குரூப்பில் கேள்வி குறியாகியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியும் முன்னாள் சாம்பியன் என்பதால் அந்த அணியையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஒருவேளை எஞ்சிய போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றியை உறுதி செய்தால் இந்திய அணிக்கு சூப்பர் 12 சுற்றில் கடும் சவால் காத்திருக்கும்.