பதவிக்காக பார்கிளேவை கட்டாயப்படுத்தினாரா ஜெய்ஷா? வெளிநாட்டு பத்திரிகைகளை விளாசிய கவாஸ்கர்

ஐசிசி-ன் அடுத்த தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Update: 2024-08-27 13:59 GMT

மும்பை,

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) தலைவராக தற்போது நியூசிலாந்தை சேர்ந்த கிரேக் பார்கிளே இருந்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 24-ந்தேதி அவர் அந்த பொறுப்பை ஏற்றார். வருகிற நவம்பர் 30-ந்தேதியுடன் அவரது பதவி காலம் முடிகிறது. அவர் மேலும் அந்த பதவியில் நீடிக்க விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதையடுத்து புதிய தலைவரை தேர்ந்தெடுக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பதவிக்கு இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளரும், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவின் மகனுமான ஜெய்ஷா போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஜெய்ஷா மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் ஐ.சி.சி-யின் தலைவராக ஒரு மாதத்தில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் ஐசிசி தலைவர் பதவியை அடைவதற்காக கிரேக் பார்கிளேவை ஜெய்ஷா வலுக்கட்டாயமாக பதவி விலகச் செய்ததாக சில வெளிநாட்டு பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் அதற்கு முன்னாள் இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "ஜெய்ஷா அடுத்த தலைவராக வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்திய கிரிக்கெட்டை போலவே ஐசிசி அமைப்பிலும் அவர் தலைவரானால் உலக அளவில் உள்ள ஆடவர் மற்றும் மகளிர் கிரிக்கெட்டர்களுக்கு பெரிய பலன் கிடைக்கும். கிரேக் பார்கிளே 3வது முறையாக தலைவர் பதவியை விரும்பாததால் விலகுவதாக சொன்னார். ஆனால் ஜெய்ஷா கட்டாயத்தில் அவர் விலகுவதாக பழைய சக்தி நாடுகளின் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை பார்கிளே மூன்றாவது முறையாக பதவி ஏற்கக்கூடாது என்று கட்டாயப்படுத்தப்பட்டால் ஐசிசி அமைப்பில் உள்ள பழைய சக்திகளின் பிரதிநிதிகள் மீட்டிங்கில் என்ன செய்தார்கள்?.

சர்வதேச கிரிக்கெட்டில் இனிமேலும் நம்மால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்ற ஆதங்கத்தாலேயே அவர்கள் இப்படி குறை சொல்வதற்காக விரல் நீட்டுகிறார்கள். கடந்த வருடங்களில் இந்திய அணி சிறந்து விளங்குவதற்கு பிசிசிஐ முக்கிய காரணமாகிறது. இருப்பினும் அணி வெல்லவில்லையெனில் ஸ்பான்சர்கள் வெளியேறி விடுவார்கள். எனவே பிசிசிஐ நிர்வாகிகள் மற்றும் வீரர்கள்தான் இந்திய கிரிக்கெட்டை ஆரோக்கியமாக வைத்திருக்கிறார்கள்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்