வலியோடு விளையாடி அணியின் வெற்றிக்கு உதவிய ஆடம் ஜாம்பா..!!

உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஆடம் ஜாம்பா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2023-10-17 07:13 GMT

image courtesy; AFP

லக்னோ,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் லக்னோவில் நேற்று அரங்கேறிய 14-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஆஸ்திரேலியாவும், இலங்கையும் மல்லுக்கட்டின. 

இந்த ஆட்டத்தில்'டாஸ்' ஜெயித்த இலங்கை கேப்டன் குசல் மென்டிஸ் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் நிசாங்கா 61, குஷால் பெரேரா 78 ரன்கள் எடுத்து 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தை கொடுத்தனர். இதனால் இலங்கை அணி பெரிய ஸ்கோரை நோக்கி செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் ஆட்டம் இழந்த பின் இலங்கை அணியின் முக்கிய வீரர்களான குசால் மெண்டிஸ் மற்றும் சமர விக்ரமா ஆகியோரை அடுத்தடுத்து காலி செய்த ஆடம் ஜாம்பா சமிகா கருணரத்னே மற்றும் தீக்சனா என பின் வரிசையில் இருந்த வீரர்களையும் அவுட்டாக்கினார். மொத்தமாக இந்த ஆட்டத்தில் 8 ஓவர்களை வீசிய ஜாம்பா 1 மெய்டன் உட்பட 47 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். அவரது இந்த சிறப்பான செயல்பாடு காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 209 ரன்கள் மட்டுமே எடுத்தது . பின்னர் 210 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 35.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஆட்டம் முடிந்து தனது செயல்பாடு குறித்து பேசிய ஆட்டநாயகன் ஆடம் ஜாம்பா ;- 'உண்மையை சொல்ல வேண்டுமென்றால் இன்று நான் உடலளவில் சிறப்பாக உணரவில்லை. ஏனெனில் என்னுடைய முதுகுப்பகுதியில் வலி இருந்தது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் விளையாடிவிட்டு தற்போது மீண்டும் விளையாடியதால் சிரமத்தை சந்தித்தேன். ஆனாலும் இன்று எனது பந்துவீச்சு மிகவும் நன்றாக இருந்ததாக உணர்கிறேன்.

எங்களது அணியின் கேப்டன் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எதிராக ஆப் ஸ்பின்னரையும், மற்ற பேட்ஸ்மேன்களுக்கு எதிராக என்னையும் பந்துவீச பயன்படுத்தினார். தனிப்பட்ட வகையில் நான் இந்த ஆட்டத்தில் பந்துவீசிய விதம் என்னுடைய பெஸ்ட் கிடையாது. இருந்தாலும் என்னுடைய அணியின் வெற்றிக்கு நான் பங்களித்ததில் மகிழ்ச்சி.

என்னுடைய வேலை மிடில் ஓவர்களில் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டியது மட்டும்தான். கடந்த ஆட்டத்தில் என்னால் மிடில் ஓவர்களில் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை. அதன் காரணமாகவே எங்களது அணியின் பந்து வீச்சாளர்கள் கடந்த ஆட்டத்தின் போது இறுதி கட்ட ஓவர்களில் கஷ்டப்பட்டனர். ஆனால் இன்றைய ஆட்டத்தில் நான் சிறப்பாக பந்துவீசியதாக நினைக்கிறேன்.

அதனால் எங்களால் எளிதில் வெற்றி பெற முடிந்தது. இந்த வெற்றியை நாங்கள் அப்படியே கொண்டு செல்ல விரும்புகிறோம். என்னுடைய பந்துவீச்சில் அதிக ரன்கள் சென்றாலும் பரவாயில்லை விக்கெட் எடுக்க வேண்டியது மட்டும்தான் என்னுடைய வேலை. அப்படி விக்கெட் எடுத்து ரன்கள் சென்றாலும் நான் மகிழ்ச்சியாகதான் இருப்பேன். எங்களுக்கு அடுத்து வரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டம்  நிச்சயம் கடினமான ஒன்றாக இருக்கும்' என கூறியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்