உலகக் கோப்பை கிரிக்கெட்: தென்ஆப்பிரிக்காவுடன் ஆஸ்திரேலிய அணி இன்று பலப்பரீட்சை

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சரிவில் இருந்து மீளும் முனைப்புடன் ஆஸ்திரேலிய அணி இன்று தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.

Update: 2023-10-12 00:39 GMT

Image Courtesy : @ProteasMenCSA

லக்னோ,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (வியாழக்கிழமை) நடக்கும் 10-வது லீக்கில் 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணி, தென்ஆப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டத்தில் இந்தியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதில் 2 விக்கெட்டுக்கு 110 ரன்கள் என்று திடமான நிலையில் இருந்த ஆஸ்திரேலியா மிடில் வரிசை சீர்குலைவால் 199 ரன்களுக்கு சுருண்டது. தனது கடைசி 7 ஒரு நாள் போட்டிகளில் 6-ல் தோற்றுள்ள ஆஸ்திரேலியா எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், வார்னர் பார்மில் உள்ளனர். அதே சமயம் மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன் ரன்குவிப்புக்கு கைகொடுக்க வேண்டியது அவசியமாகும். தசைப்பிடிப்பால் அவதிப்பட்ட ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டோனிஸ் குணமடைந்து விட்டார். அவர் திரும்பினால், கிரீனின் இடம் காலியாகும்.

இதே போல் கேப்டனும், வேகப்பந்து வீச்சாளருமான கம்மின்ஸ், தனது கடைசி 4 ஒரு நாள் போட்டிகளில் 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். சுழற்பந்து வீச்சாளர் ஆடம் ஜம்பா இந்த ஆண்டில் ஆடிய 10 ஆட்டங்களில் 4-ல் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. வெற்றிப்பாதைக்கு திரும்ப இது போன்ற பந்துவீச்சு குறைபாடுகளை களைய வேண்டியது முக்கியமாகும்.

தென்ஆப்பிரிக்கா தனது முதல் ஆட்டத்தில் 102 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை துவம்சம் செய்தது. இதில் குயின்டான் டி காக், வான்டெர் டஸன், மார்க்ரம் ஆகியோரது சதத்தால் அந்த அணி 428 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது. கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்கா கைப்பற்றியது. பந்து வீச்சில் மார்கோ யான்சென், ரபடா, கோட்ஜீ, கேஷவ் மகராஜ் வலு சேர்க்கிறார்கள்.

ஒரு நாள் கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் இதுவரை 108 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 54-ல் தென்ஆப்பிரிக்காவும், 50-ல் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றன. 3 ஆட்டங்கள் சமனில் (டை) முடிந்தது. மற்றொரு ஆட்டத்தில் முடிவில்லை.

உலகக் கோப்பையில் சந்தித்த 6 ஆட்டங்களில் 3-ல் ஆஸ்திரேலியாவும், 2-ல் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன. ஒரு ஆட்டம் சமனில் முடிந்தது.

50 ஆயிரம் இருக்கை வசதி கொண்ட லக்னோ ஆடுகளத்தில் கடந்த ஜனவரி மாதம் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர்போட்டியில் 100 ரன் இலக்கை கூட ஒரு பந்து மீதம் வைத்து திக்கி திணறி இந்தியா எட்டிப்பிடித்தது. ஆடுகளம் சுழலுக்கு தாறுமாறாக எகிறியதால் ஒரு சிக்சரும் அடிக்க முடியவில்லை. இது போட்டிக்கு உகந்த ஆடுகளம் அல்ல என்று சர்ச்சை கிளம்பியதால் பிட்ச் பராமரிப்பாளர் நீக்கப்பட்டார்.

அதன் பிறகு ஆடுகளத்தை பெயர்த்து மறுசீரமைப்பு செய்யப்பட்டது. இதனால் இந்த ஆடுகளத்தன்மை எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணிக்க முடியாது. என்றாலும் சுழலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்று தெரிகிறது. இங்கு இதுவரை நடந்துள்ள 4 ஒரு நாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்கள் எடுத்ததே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது.

சரிசம பலத்துடன் இரு அணிகளும் மோதுவதால் இந்த ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

ஆஸ்திரேலியா: வார்னர், மிட்செல் மார்ஷ், ஸ்டீவன் சுமித், லபுஸ்சேன், மேக்ஸ்வெல், அலெக்ஸ் கேரி, மார்கஸ் ஸ்டோனிஸ் அல்லது கேமரூன் கிரீன், கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசில்வுட்.

தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், பவுமா (கேப்டன்), வான்டெர் டஸன், மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென், டேவிட் மில்லர், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜீ அல்லது ஷம்சி, கேஷவ் மகராஜ், ரபடா, இங்கிடி.

Tags:    

மேலும் செய்திகள்