'என் வாழ்க்கையின் சிறந்த தருணம்'- விராட் கோலி உடனான சந்திப்பு குறித்து ஷ்ரேயங்கா பாட்டீல்
விராட் கோலியை சந்தித்தது குறித்து ஷ்ரேயங்கா பாட்டில் பதிவிட்டுள்ள சமூக வலைதள பதிவு இணயத்தில் வைரலாகி வருகிறது.;
பெங்களூரு,
2-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்று அசத்தியதுடன், மகளிர் பிரீமியர் லீக் தொடரில் முதல் முறையாக கோப்பையை வென்று சாதித்துள்ளது.
இதையடுத்து கோப்பையை வென்ற ஆர்.சி.பி. மகளிர் அணிக்கு அந்த அணி நிர்வாகம் சார்பில் பெங்களூருவிலுள்ள சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் பெண்கள் பிரீமியர் லீக் கிரிக்கெட்டில் மகுடம் சூடிய பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியினர் கவுரவிக்கப்பட்டனர்.
மந்தனா கோப்பையுடன் மைதானத்திற்குள் நுழைந்தபோது இரு புறமும் பெங்களூரு ஆண்கள் அணி வீரர்கள் வரிசையாக நின்று மரியாதை அளித்தனர். பின்னர் வீராங்கனைகள் மைதானத்தில் கோப்பையுடன் உற்சாகமாக வலம் வந்தனர். இதில் ஆண்கள் அணி வீரர்கள் கோப்பையை வென்ற மகளிர் அணி வீராங்கனைகளுக்கு தங்களது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
இந்நிலையில் இந்த பெண்கள் பிரீமியர் லீக் தொடரில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆர்.சி.பி. அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய ஷ்ரேயங்கா பாட்டில் விராட் கோலியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு, என் வாழ்க்கையின் சிறந்த தருணம் என தலைப்பிட்டுள்ளார்.
ஷ்ரேயங்கா பாட்டில் தனது எக்ஸ் தள பதிவில், 'அவரால்தான் நான் கிரிக்கெட்டை பார்க்க ஆரம்பித்தேன். அவரைப்போல் ஆக வேண்டும் என்ற கனவுடன்தான் வளர்ந்தேன். நேற்று இரவு, என் வாழ்வின் மிகச்சிறப்பு வாய்ந்த தருணம். விராட் கோலி என்னை நோக்கி, "ஹாய் ஷ்ரேயங்கா, நன்றாக பந்துவீசினாய்" என்றார். உண்மையில் அவருக்கு என் பெயர் தெரிந்துள்ளது" என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.