ராஜஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தானுக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் பெங்களூரு அணி 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Update: 2023-04-23 20:06 GMT

பெங்களூரு,

10 அணிகள் இடையிலான 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நேற்று மாலை பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த 32-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, முன்னாள் சாம்பியன் ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொண்டது. பெங்களூரு கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ்சுக்கு விலாபகுதியில் பிரச்சினை இருப்பதால் முந்தைய ஆட்டத்தை போன்றே பேட்டிங் மட்டும் செய்து விட்டு 2-வது இன்னிங்சில் மாற்று வீரருக்காக வெளியில் வைப்பது என்ற அடிப்படையில் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார். இதனால் பெங்களூரு அணியின் கேப்டன் பொறுப்பை விராட் கோலி ஏற்றார்.

பசுமை மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பெங்களூரு அணியினர் ஆண்டுதோறும் ஒரு ஆட்டத்தில் சிவப்புக்கு பதிலாக பச்சைநிற சீருடை அணிவது வழக்கம். இதன்படி இந்த ஆட்டத்தில் அவர்கள் பச்சைநிற சீருடையுடன் வலம் வந்தனர்.

மேக்ஸ்வெல் கலக்கல்

'டாஸ்' ஜெயித்த ராஜஸ்தான் கேப்டன் சாம்சன் முதலில் பெங்களூவை பேட் செய்ய அழைத்தார். இதையடுத்து பிளிஸ்சிஸ்சும், கேப்டன் விராட் கோலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வேகப்பந்து வீச்சாளர் டிரென்ட் பவுல்ட் வீசிய முதல் பந்திலேயே விராட் கோலி (0) டக்-அவுட் ஆனார். இன்ஸ்விங்கராக சீறிய அந்த பந்து அவரை எல்.பி.டபிள்யூ ஆக்கியது. ஐ.பி.எல். போட்டியில் பவுல்ட்டின் 100-வது விக்கெட் இதுவாகும். இந்த மைல்கல்லை எட்டிய 22-வது வீரர் ஆவார். அடுத்து வந்த ஷபாஸ் அகமதுவும் (2 ரன்) பவுல்ட் பந்து வீச்சுக்கு இரையானார்.

3-வது விக்கெட்டுக்கு பிளிஸ்சிஸ்சுடன், ஆல்-ரவுண்டர் மேக்ஸ்வெல் கைகோர்த்தார். இருவரும் ராஜஸ்தானின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். சந்தீப் ஷர்மாவின் பந்து வீச்சில் பிளிஸ்சிஸ் இரு சிக்சர்களை பறக்க விட்டார். இதே போல் சாஹல், அஸ்வினின் சுழலில் மேக்ஸ்வெல் சிக்சர் விரட்டி ரசிகர்களை குதூகலப்படுத்தினார். ரன்ரேட் 10-க்கு மேலாக நகர்ந்தது. இவர்கள் விளையாடிய விதத்தை பார்த்த போது ஸ்கோர் 220-ஐ நெருங்கும் போல் தோன்றியது.

190 ரன் இலக்கு

ஆனால் ஸ்கோர் 139 ஆக (13.2 ஓவர்) உயர்ந்த போது இந்த ஜோடி ரன்-அவுட்டில் பிரிந்தது. இந்த சீசனில் 5-வது அரைசதம் அடித்த பிளிஸ்சிஸ் 62 ரன்களில் (39 பந்து, 8 பவுண்டரி, 2 சிக்சர்) ரன்-அவுட் ஆனார். அஸ்வின் வீசிய அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல் (77 ரன், 44 பந்து, 6 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார்.

இவர்களின் வெளியேற்றத்துக்கு பிறகு ரன்ரேட் வெகுவாக குறைந்தது. கடைசி 5 ஓவர்களில் தினேஷ் கார்த்திக் (16 ரன்) உள்பட 5 விக்கெட்டுகளை பறிகொடுத்ததுடன் வெறும் 33 ரன் மட்டுமே எடுத்து தடுமாறினர். இதனால் ஸ்கோர் 200-ஐ கூட தொட முடியாமல் போனது. 20 ஓவர் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட்டுக்கு 189 ரன்கள் குவித்தது.

பின்னர் 190 ரன் இலக்கை நோக்கி ஆடிய ராஜஸ்தான் அணியில் ஜோஸ்பட்லர் (0) முகமது சிராஜியின் வேகத்தில் கிளீன் போல்டானார். 2-வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வாலும், தேவ்தத் படிக்கலும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் அதிரடியிலும் வெளுத்து வாங்கினர். ராஜஸ்தானுக்கு நம்பிக்கை தந்த இந்த கூட்டணி ஸ்கோர் 99-ஐ (11.4 ஓவர்) எட்டிய போது, உடைந்தது. தேவ்தத் படிக்கல் 52 ரன்களில் (34 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) டேவிட் வில்லியின் பந்து வீச்சில் கோலியிடம் பிடிபட்டார். ஜெய்ஸ்வால் தனது பங்குக்கு 47 ரன்கள் (37 பந்து, 5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தார். தொடர்ந்து கேப்டன் சஞ்சு சாம்சன் (22 ரன்), ஹெட்மயர் (3 ரன்) சீக்கிரம் நடையை கட்ட ஆட்டம் பெங்களூரு பக்கம் திரும்பியது. 11 முதல் 14-வது ஓவர் வரை ஒரு பவுண்டரி கூட அடிக்காதது ராஜஸ்தானுக்கு பாதகமாக மாறியது.

பெங்களூரு வெற்றி

கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 20 ரன் தேவைப்பட்டது. பரபரப்பான கடைசி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் வீசினார். அவர் வீசிய முதல் 3 பந்துகளில் 2 பவுண்டரி உள்பட 10 ரன்கள் எடுத்த அஸ்வின் 4-வது பந்தை தூக்கியடித்து கேட்ச் ஆனார். அடுத்து வந்த மாற்று ஆட்டக்காரர் அப்துல் பாசித் 1 ரன் எடுத்தார். கடைசி பந்தில் ஜூரெல் ஒரு எடுத்தார்.

20 ஓவர்களில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட்டுக்கு 182 ரன் சேர்த்து அடங்கியது. துருவ் ஜூரெல் 34 ரன்களுடன் (16 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். மேக்ஸ்வெல் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இதன் மூலம் பெங்களூரு அணி 7 ரன் வித்தியாசத்தில் 'திரில்'வெற்றியை ருசித்தது. 7-வது லீக்கில் ஆடிய பெங்களூருவுக்கு இது 4-வது வெற்றியாகும். ராஜஸ்தானுக்கு 3-வது தோல்வியாகும்.

கோலி 7-வது முறையாக 'கோல்டன் டக்'

பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மொத்தம் 10 முறை ரன்னின்றி வீழ்ந்து இருக்கிறார். இதில் 7 முறை சந்தித்த முதல் பந்திலேயே (கோல்டன் டக்) அவுட் ஆகியிருக்கிறார். ஐ.பி.எல்.-ல் ரஷித்கானுக்கு (10 முறை) அடுத்து அதிக முறை 'கோல்டன் டக்' ஆன வீரர்களின் வரிசையில் சுனில் நரின், ஹர்பஜன்சிங் ஆகியோருடன் 2-வது இடத்தை பகிர்ந்துள்ளார்.  

Tags:    

மேலும் செய்திகள்